'மாஜி' விரிவுரையாளர் மர்மச்சாவு கொலையா, தற்கொலையா?
'மாஜி' விரிவுரையாளர் மர்மச்சாவு கொலையா, தற்கொலையா?
ADDED : மார் 30, 2026 04:33 AM

ஷிவமொக்கா: பாக்கு தோட்டத்தில் எரிந்த நிலையில் கிடந்த ஓய்வு பெற்ற விரிவுரையாளரின் உடலால் பரபரப்பு ஏற்பட்டது.
ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவில் வசித்தவர் சுரேஷ், 58. ஓய்வு பெற்ற தனியார் கல்லுாரி விரிவுரையாளர். இவர் மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, வெளியே சென்றார்.
இந்நிலையில், ஹனுமந்தபுரா பகுதியிலுள்ள சுரேஷுக்கு சொந்தமான பாக்கு தோட்டத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற ஹொலேஹொனனுார் போலீசார் விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்தனர். உடல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.
ஷிவமொக்கா எஸ்.பி., நிகில், சம்பவ இடத்தை பார்வையிட்டார். விசாரணையில், உயிரிழந்தது சுரேஷ் என்பது உறுதியானது.
சம்பவ இடத்தில் அவர் பயன்படுத்திய, பைக்கும் இருப்பது கண்டறியப்பட்டது. கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
