முன்னாள் அமைச்சரின் உறவினர் வெட்டிக்கொலை மர்ம கும்பல் அட்டகாசம்
முன்னாள் அமைச்சரின் உறவினர் வெட்டிக்கொலை மர்ம கும்பல் அட்டகாசம்
ADDED : ஏப் 04, 2026 04:50 AM

கலபுரகி: முன்னாள் அமைச்சர் ரேவுநாயக் பெலமகியின் உறவினர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது அலுவலகத்தில் நுழைந்து வெட்டி சாய்த்த கும்பலை போலீஸ் தேடுகிறது.
கலபுரகி ரூரல் காங்கிரஸ் தலைவர் ரேவுநாயக் பெலமகி. இவர், பா.ஜ.,வில் இருந்த போது அமைச்சராக பணியாற்றினார். இவரது உறவினர் அனில் ரத்தோட், 45. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தார். ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும் ஈடுபட்டார்.
நேற்று முன்தினம் இரவு கலபுரகி டவுன் பி.டி., காலனி வெங்கடேஸ்வரா காம்ப்ளக்சில் உள்ள தன் அலுவலகத்தில், அனில் ரத்தோட் தனியாக இருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேர் அலுவலகத்திற்குள் சென்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அனில் ரத்தோட்டை, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். பலத்த வெட்டு காயம் அடைந்த அனித் ரத்தோட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறிது நேரம் கழித்து அலுவலக ஊழியர் வந்து பார்த்த போது, கொலை நடந்தது தெரிந்தது. தகவல் அறிந்ததும் கலபுரகி போலீஸ் கமிஷனர் சரணப்பா, ஸ்டேஷன் பஜார் போலீசார் விரைந்து சென்றனர். அனில் ரத்தோட்டை கொன்றது யார், என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை.
தொழில் விவகாரத்தில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மூன்று பேர் கும்பலை போலீஸ் தேடுகிறது. முன்னாள் அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் பிரமுகருமான ரேவுநாயக் உறவினரின் கொலை சம்பவம், கலபுரகியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
