/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு காங்.,கில் சேர அழைப்பு
/
'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு காங்.,கில் சேர அழைப்பு
ADDED : ஏப் 24, 2025 07:12 AM

தங்கவயல்: பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., எம்.நாராயணசாமியை காங்கிரசுக்கு இழுக்கும் வேலை நடந்து வருகிறது. தங்கவயல், பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நேற்று அவருக்கு நேரில் அழைப்பு விடுத்தனர்.
தங்கவயல் தொகுதிக்கு உட்பட்ட கேசம்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.நாராயணசாமி. இவர் காங்கிரஸ், ம.ஜ.த., - பா.ஜ., என அனைத்து கட்சிகளிலும் 'அந்தர் பல்டி' போட்டவர். கட்சி தாவுவது என்பது இவருக்கு ஒன்றும் புதியதல்ல.
கடந்த சட்டசபைத் தேர்தலில் பங்கார்பேட்டை தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட நாராயணசாமி, ஓட்டுப்பதிவுக்கு நான்கைந்து நாட்கள் உள்ளபோதே யார் கண்ணிலும் சிக்காமல் மாயமானார்.
காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.என். நாராயணசாமியுடன் உள் ஒப்பந்தம் செய்து கொண்டாரோ என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.
இதனால் பங்கார்பேட்டை தொகுதியில் காங்கிரசுக்கும், ம.ஜ.த.,வுக்கும் இடையே தான் போட்டி என்ற நிலை உருவானது. முடிவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில் எம்.நாராயணசாமியை அவரது வீட்டில் பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி சந்தித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.
தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா நேற்று, தன் அரசியல் ஆலோசகர் கோவிந்த கவுடா, லட்சுமி நாராயணா, பிளாக் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண ரெட்டி ஆகியோருடன் எம்.நாராயணசாமி வீட்டிற்கு சென்று, காங்கிரசில் சேருமாறு அழைத்துள்ளார்.
தன் முடிவை 15 நாட்களுக்குள் தெரிவிப்பதாக என்.நாராயணசாமி கூறியுள்ளார்.