/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில அரசியலுக்கு திரும்பும் 'மாஜி' எம்.பி.,
/
மாநில அரசியலுக்கு திரும்பும் 'மாஜி' எம்.பி.,
ADDED : ஜன 07, 2026 12:01 AM

- நமது நிருபர் -
மைசூரு பா.ஜ., - எம்.பி.,யாக இருந்த பிரதாப் சிம்ஹா, அடுத்த சட்டசபை தேர்தலில், சாமராஜா சட்டசபை தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
மைசூரு பா.ஜ., - எம்.பி.,யாக பிரதாப் சிம்ஹா இருந்தார். 2023ல் பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த இருவர், ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் மற்றும் ஊழியர்கள், அவர்களை மடக்கி பிடித்தனர்.
இவருக்கு மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா தான், பார்லிமென்ட் கூட்டத்தொடரை பார்க்க அனுமதி பாஸ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், மைசூரில் அவரது அலுவலகம் முன் காங்கிரசாரும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், கட்சி மேலிடம் இவருக்கு சீட் வழங்க மறுத்துவிட்டது.
இவர் பலமுறை மேலிட தலைவர்களிடம் விளக்கியும், கட்சி தலைமை ஏற்கவில்லை. அத்துடன், பா.ஜ., நடத்திய தொகுதி ஆய்வில், பிரதாப் சிம்ஹாவுக்கு எதிரான அலை இருப்பதை உணர்ந்தது.
எனவே, பிரதாப் சிம்ஹாவுக்கு பதிலாக, மைசூரு மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கு சீட் வழங்கப்பட்டது. அவரும் ஜெயித்து எம்.பி.,யாகி விட்டார்.
இதனால் அதிருப்தியில் இருந்த சிம்ஹா, கட்சி தலைமை மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததால், அமைதியானார்.
பா.ஜ., நடத்திய போராட்டங்களில் பங்கேற்றாமல் இருந்த அவர், அதன்பின் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட துவங்கி உள்ளார்.
இது தொடர்பாக, பிரதாப் சிம்ஹா கூறியதாவது:
தேசிய அரசியலில் இருந்து விட்டு, மாநில அரசியலுக்கு வருவது என்பது பொதுவான விஷயம் தான். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அங்கு வேலை இல்லை என்றால், இங்கு தானே இருக்க வேண்டும்.
அடுத்த 2028 சட்டசபை தேர்தலில், மைசூரின் சாமராஜா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். இங்குள்ள மக்கள் அறிவாளிகள். அவர்களை பணத்தால் வாங்கிட முடியாது. தொகுதி வளர்ச்சிக்கே அவர்கள் முக்கியத் துவம் தருவர்.
நானாகவே தான், இத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதற்கு முன், பா.ஜ.,வின் மறைந்த சங்கரலிங்கே கவுடா, தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். அதன்பின், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் மாற்றி மாற்றி தொகுதியை கைப்பற்றி உள்ளன. என் அரசியல் வாழ்க்கையை, இந்த தொகுதியில் இருந்து தான் துவக்கினேன்.
இத்தொகுதியில் ஒக்கலிகர் சமுதாயத்தினர் மட்டுமின்றி, அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர். சாமராஜா தொகுதிக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட எம்.எல்.ஏ., தேவை.
நான் எம்.பி.,யாக இருந்தபோது, இத்தொகுதியில் கே.ஆர்.மருத்துவமனை வளாகத்தில், 'ஆக்சிஜன் மையம்' அமைத்து கொடுத்தேன். கொரோனாவின் போது கே.ஆர்.எஸ்., சாலையில் இளவரசி கிருஷ்ணஜம்மன்னி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி கொடுத்தேன். மேட்டகள்ளி தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைத்து உள்ளேன். இப்படி பல மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்துள்ளேன். எனவே, அடுத்த சட்டசபை தேர்தலில், இத்தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான பணியை சில மாதங்களுக்கு முன்னரே, சத்தமில்லாமல் பிரதாப் சிம்ஹா துவக்கி விட்டார். தொகுதியின் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். தொகுதியில் நடக்கும் பா.ஜ., கூட்டங்கள், தனியார் விழாக்களில் பங்கேற்று வருகிறார். அதுதவிர, தொகுதி தலைவர்களின் பிறந்த நாளில், தனது சமூக வலைதளம் மூலம் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
இத்தொகுதியில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் நாகேந்திரா 68,837 ஓட்டுகளும்; காங்கிரசின் ஹரிஷ் கவுடா 72,931 ஓட்டுகளும் பெற்றனர். 4,094 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஹரிஷ் கவுடா வெற்றி பெற்றார்.

