/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொகுதி இடைத்தேர்தல் தயாராகும் காங்., - பா.ஜ.,
/
தொகுதி இடைத்தேர்தல் தயாராகும் காங்., - பா.ஜ.,
ADDED : ஜன 06, 2026 11:59 PM
- நமது நிருபர் -
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஷாமனுார் சிவசங்கரப்பா, மேட்டி மறைவால் காலியான, தாவணகெரே தெற்கு மற்றும் பாகல்கோட் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகின்றன.
பாகல்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மேட்டி, உடல் நிலை பாதிப்பால் காலமானார். சமீபத்தில் தாவணகெரே தெற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஷாமனுார் சிவசங்கரப்பாவும் காலமானார். இவர்களால் காலியான இரண்டு தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம், முன்னேற்பாடுகளை துவக்கியுள்ளது. வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது.
மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகின்றன. இரண்டுமே ஆளுங்கட்சியான காங்கிரஸ் தொகுதி என்பதால், இரண்டிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தாவணகெரே தெற்கில், சிவசங்கரப்பாவின் இளைய மகன் கணேஷ், தோட்டக்கலைத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனாவின் மகனும், சிவசங்கரப்பாவின் பேரனுமான சமர்த், சீட் பெற முயற்சிக்கின்றனர்.
இத்தொகுதியில் சிறுபான்மையினர் வாக்காளர்கள் அதிகம் என்றாலும், சிவசங்கரப்பா குடும்பத்தினருக்கு செல்வாக்கு அதிகம். இவர்களின் முடிவின்படி வேட்பாளர் யார் என்பதை, மேலிடம் தீர்மானிக்கும். கணேஷ் அல்லது சமர்த் ஆகியோரில் ஒருவருக்கு, சீட் கிடைக்கலாம். இவரது குடும்பத்தை தவிர்த்துவிட்டு, வேறு வேட்பாளருக்கு சீட் கிடைக்குமா என்பது சந்தேகமே.
எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் திறமையான வேட்பாளரை களமிறக்கி, தொகுதிகளை கைப்பற்ற முயற்சிக்கிறது. கடந்த முறை சிவசங்கரப்பாவை எதிர்த்து போட்டியிட்ட அஜய்குமார், வால்மீகி சமுதாய தலைவர் சீனிவாஸ் தஸ்கரியப்பா சீட் கேட்கின்றனர்.
பாகல்கோட், தாவணகெரே தொகுதிகளின் இடைத்தேர்தல், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு, அக்னி பரீட்சையாக இருக்கும். இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் வசம் உள்ளன. அனுதாப அலை இக்கட்சிக்கு சாதகமாக இருக்கும். காலமான இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் அதிக செல்வாக்கு உள்ளவர்கள். இவ்வளவையும் சமாளித்து, கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து, விஜயேந்திரா தன் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும்.
ஏற்கனவே இவரை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற, சொந்த கட்சியினரே, 'உள்குத்து' வேலை செய்கின்றனர். அதேபோன்று இடைத்தேர்தலில், இவரது எதிரிகள், காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு, மறைமுகமாக வேலை செய்யவும் வாய்ப்புள்ளது.
இதை சமாளித்து, பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால், விஜயேந்திராவின் தலைமைக்கு மேலிடத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். அவரது எதிரிகளின் முயற்சியும் பிசுபிசுக்கும். பொங்கல் பண்டிகைக்கு பின், வேட்பாளர் குறித்து பா.ஜ., மேலிடம் ஆலோசிக்கும்.
இடைத்தேர்தலில் மற்றொரு எதிர்க்கட்சியான ம.ஜ.த., ஆர்வம் காட்டவில்லை. பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ளதால், இக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்துவிட்டு ஒதுங்கி கொள்ளும் என தெரிகிறது.

