/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலை களமாக மாறும் கனிம சுரங்க பூமி
/
கொலை களமாக மாறும் கனிம சுரங்க பூமி
ADDED : ஜன 06, 2026 11:54 PM

- நமது நிருபர் -:
கர்நாடகா - ஆந்திர மாநில எல்லையில் உள்ளது பல்லாரி. கனிம சுரங்க தொழிலுக்கு பெயர் எடுத்த இந்த மாவட்டம், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையை பதித்து உள்ளது. 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பா.ஜ., சார்பில், டில்லி முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டனர்.
அந்த தேர்தல் இருவருக்கும் இடையில் கடும் போட்டியை ஏற்படுத்தியது. சுஷ்மா சுவராஜுக்காக, பா.ஜ., முன்னாள் அமைச்சர்க ள் ஜனார்த்தன ரெட்டி, ஸ் ரீராமுலு பம்பரம் போல சுழன்று வேலை செய்தனர். சோனியாவிடம், சுஷ்மா சுவராஜ் தோற்று போனாலும், கட்சி மேலிடத்தில் ரெட்டி, ஸ்ரீராமுலுவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
பா.ஜ.,வின் முகம் இருவரும் பல்லாரி அரசியலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டனர். ரெட்டி சமூகத்தின் தலைவராக ஜனார்த்தன ரெட்டியும், வால்மீகி சமூக தலைவராக ஸ்ரீராமுலுவும் அங்கீகாரம் பெற்றனர்.
கனிம சுரங்க வழக்கில் ஜனார்த்தன ரெட்டி சிறைக்கு சென்ற பின், ஸ்ரீராமுலு மட்டுமே பல்லாரி மாவட்ட பா.ஜ., முகமாக இருந்தார்.
ஆனால், ஒவ்வொரு தேர்த லிலும் தொகுதி மாறி போட்டியிட்டது அவருக்கு மைனசாக மாறியது. இதை காங்கிரஸ் நன்கு பயன்படுத்தி கொண்டது.
கடந்த, 2023 சட்டசபை தேர்தலில் பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி, பல்லாரி ரூரல், சிறுகுப்பா, கம்ப்ளி, சண்டூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலும், காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதிலும் பல்லாரியில், 35 வயதே ஆன பரத் ரெட்டி, அபார வெற்றி பெற்றார்.
ஏற்கனவே ஜனார்த்தன ரெட்டி, பரத் ரெட்டி குடும்பத்திற்கு இடையில், தொழில் போட்டி உள்ளது. தங்கள் கோட்டையான பல்லாரி தொகுதியில் பரத் ரெட்டி வெற்றி பெற்றதை, ஜனார்த்தன ரெட்டியால் ஜீரணிக்க முடியவில்லை.
முதல்முறை வெற்றி பெற்றவர் என்றாலும், பரத் ரெட்டிக்கு கொஞ்சம் வாய் அதிகம். வயது வித்தியாசம் பார்க்காமல், சட்டசபையிலேயே ஜனார்த்தன ரெட்டியை, 'வா, போ' என்று ஒருமையில் பேசினார்.
தற்போது வால்மீகி சிலை வைக்க, பேனர் கட்டிய விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தில், காங்கிரஸ் தொண்டர் உயிர் போனது தான் மிச்சம்.
இரு ரெட்டிகளுக்கும் இடையில் பல்லாரியில் போர் நடக்கிறது. பக்கத்து மாநிலமான ஆந்திராவில், அரசியல் ரீதியிலான கொலைகள் அடிக்கடி நடப்பதும், அங்கு ரத்த ஆறு ஓடுவதும் சகஜமாக நடக்கிறது.
அந்த காற்று, இப்போது கனிம சுரங்க பூமியிலும் வீச ஆரம்பித்து உள்ளது.
பலி கொடுக்க... உண்மையை சொல்ல போனால், இரண்டு ரெட்டிகளுக்கும் இடையில் சிக்கி அல்லல்படுவது, பல்லாரி மக்கள் தான். இவர்களின் அரசியல் லாபத்திற்காக, தொண்டர்களை பலி கொடுக்க கூட தயாராகி விட்டனர். கனிம சுரங்கத்திற்கு பெயர் பெற்ற மாவட்டத்தில், இன்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது.
பலர் பிழைப்புக்காக பெங்களூரு, ஆந்திராவுக்கு செல்கின்றனர். கொலை வெறி அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, பல்லாரி மக்களுக்காக ரெட்டிகள் பணியாற்றினால், அம்மாவட்டம் வளர்ச்சி பெறும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.
'ஆந்திராவை போன்று பல்லாரியையும் கொலை களமாக மாற்றி விடாதீர்கள்' என்பதே, அம்மாவட்ட மக்கள் கோரிக்கையாக உள்ளது.

