/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முடா' மாஜி கமிஷனருக்கு 10 நாள் காவல்
/
'முடா' மாஜி கமிஷனருக்கு 10 நாள் காவல்
ADDED : செப் 18, 2025 07:47 AM

பெங்களூரு, : 'முடா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் கமிஷனர் தினேஷ் குமாரிடம், 10 நாட்கள் விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 50:50க்கு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு, வீட்டுமனை ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கடந்த 14ம் தேதி, 'முடா' முன்னாள் கமிஷனர் தினேஷ் குமாருக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
நேற்று முன்தினம் மதியம் விசாரணைக்கு ஆஜரானார். சரியாக ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவே, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஒரு நாள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு, நீதிபதி அனுமதி வழங்கினார். ஒரு நாள் காவல் முடிந்த நிலையில், நேற்று மாலை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
தினேஷ் குமாரை 15 நாட்கள் தங்கள் காவலுக்கு அனுப்பும்படி, அமலாக்கத்துறையினர் கேட்டுக் கொண்டனர். அவரிடம் 10 நாட்கள் விசாரிக்க, நீதிபதி அனுமதி கொடுத்தார்.
சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா கூறுகையில், ''முடா வழக்கில் முன்னாள் கமிஷனர் தினேஷ் குமார் கைது செய்யப்பட்டு இருப்பது, எனது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. வரும் நாட்களில் சட்டவிரோதமாக நிலம் வாங்கியவர்கள் கைது செய்யப்படுவர்.
''சித்தராமையா மீது நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கு முடிந்துவிட்டது என்று, மக்கள் மத்தியில் தவறான எண்ணம் உள்ளது. வழக்கு இன்னும் முடியவில்லை,'' என்றார்.
முடா வழக்கில் 3,000 கோடி ரூபாய் முதல் 4,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் கமிஷனர் தினேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது வழக்கிற்கு பலத்தை அதிகரித்துள்ளது. இன்னும் நிறைய பேர் இந்த வழக்கில் கைது செய்யப்படுவர். அசோக், எதிர்க்கட்சித் தலைவர்