/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.2.50 கோடி கேட்டு வாலிபர் கடத்தல் அதிரடியாக மீட்டு நான்கு பேர் கைது
/
ரூ.2.50 கோடி கேட்டு வாலிபர் கடத்தல் அதிரடியாக மீட்டு நான்கு பேர் கைது
ரூ.2.50 கோடி கேட்டு வாலிபர் கடத்தல் அதிரடியாக மீட்டு நான்கு பேர் கைது
ரூ.2.50 கோடி கேட்டு வாலிபர் கடத்தல் அதிரடியாக மீட்டு நான்கு பேர் கைது
ADDED : ஜூலை 26, 2025 11:05 PM

அசோக்நகர்: வாலிபரை கடத்தி 2.50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட வாலிபரின் தோழி தலைமறைவாகிவிட்டார்.
பெங்களூரு, அசோக்நகரை சேர்ந்தவர் லாரன்ஸ் மெல்வானி, 27. பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்திரா நகரில் உள்ள 'பப்'பிற்கு போக்கர் எனும் சூதாட்டம் விளையாட அடிக்கடி செல்வார். நண்பர்களுக்கும் ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். அந்த 'பப்'பிற்கு வந்த இந்திராநகரின் மஹிமா, 25, என்பவருக்கும், லாரன்சுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி, நட்பாக பழகினர்.
சொகுசு ஹோட்டல் கடந்த மாதம் துபாய் சென்ற லாரன்ஸ், கடந்த 15ம் தேதி பெங்களூருக்கு திரும்பி வந்தார். வீட்டிற்கு செல்லாமல் எம்.ஜி.ரோட்டில் உள்ள, சொகுசு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி இருந்தார். இதுபற்றி மஹிமாவிடம் கூறினார். கடந்த 16ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு லாரன்சிடம் மொபைல் போனில் பேசிய மஹிமா, 'உன்னை உடனடியாக பார்க்க வேண்டும். இந்திராநகரில் உள்ள என் வீட்டிற்கு வா. உனக்காக வாடகை கார் முன்பதிவு செய்துள்ளேன்' என்று கூறி உள்ளார்.
ஹோட்டலில் இரு ந்து வெளியே வந்த லாரன்ஸ், வாடகை காரில் ஏறிச் சென்றார். ஆனால் மஹிமா வீட்டிற்கு கார் செல்லவில்லை. வேறு பாதையில் சென்றது. காருக்குள் ஏறிய மேலும் 3 பேர், லாரன்ஸை தாக்கினர்.
இந்திராநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு கடத்திச் சென்றனர். அங்கு வந்த மஹிமா, லாரன்ஸிடம் முதலில் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். பின், “2.50 கோடி ரூபாய் தந்தால் தான், உயிருடன் விடுவோம்,” என்று கூறினார்.
“என்னை விட்டு விடுங்கள்... என்னிடம் பணமில்லை,” என, லாரன்ஸ் கதறினார். அவர் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை பறித்தனர்.
போலீசில் புகார் இதற்கிடையில் லாரன்ஸ் காணாமல் போனது பற்றி, அவரது தாய் அசோக்நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், லாரன்ஸை இந்திராநகரில் அடுக்குமாடி குடியிருப்பில், அடைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற போலீசார், லாரன்சை மீட்டனர்.
அவரை கடத்திய முகமது ஆசிப், 45, முகமது நவாஸ், 27, முகமது சுகைல், 25, சல்மான் பாஷா, 34, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மஹிமாவை போலீசார் தேடுகின்றனர்.
லாரன்ஸிடம் இருந்து பறித்த ஒரு லட்சம் ரூபாய், இரண்டு ஐபோன்களை போலீசார் மீட்டனர்.