/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காணாமல் போன மகனை தந்தையுடன் சேர்த்த ஓ.டி.பி.,
/
காணாமல் போன மகனை தந்தையுடன் சேர்த்த ஓ.டி.பி.,
ADDED : ஜூலை 26, 2025 11:05 PM
கலபுரகி: கலபுரகி நகரின் காவிரி நகரில் வசிப்பவர் பீனிக்ஸ் சரணப்பா, மசாலா பொருட்களை விற்று, குடும்பத்தை நிர்வகித்து வருகிறார்.
இவரது 16 வயது மகனுக்கு, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. திரைப்படங்களால் உந்தப்பட்ட சிறுவன், மும்பைக்கு சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என கருதி, 2023 டிசம்பரில் வீட்டை விட்டு வெளியேறினான்.
மகன் வீட்டில் இருந்து காணாமல் போன பின், பீனிக்ஸ் சரணப்பா பல இடங்களில் தேடி அலைந்தார். போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். ஆனாலும் மகனை பற்றி எந்த தகவலும் தெரியாமல் வருத்தத்தில் இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, பீனிக்ஸ் சரணப்பாவின் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'வங்கியில் இருந்து உங்களை தொடர்பு கொள்வர். அவர்களிடம் ஓ.டி.பி., எனும் ஒரு முறை கடவு சொல் எண்ணை தெரிவியுங்கள்' என்றார்.
போனில் பேசுவது யார் என்று சரணப்பாவுக்கு தெரியவில்லை. குழப்பத்துடன் 'நீங்கள் யார், நான் ஏன் ஓ.டி.பி., தெரிவிக்க வேண்டும்?' என, கேட்டார்.
அப்போது, தன் பெயரை கூறி, 'வங்கிக் கணக்கு தொடர்பான ஓ.டி.பி., எண் உங்களுக்கு வரும். வங்கியில் இருந்து உங்களை தொடர்பு கொண்டால், அவர்களிடம் அதை கூறுங்கள்' என, சிறுவன் விவரித்தான்.
அப்போது தான் பேசுவது, தன் மகன் என்பது அறிந்து சரணப்பா மகிழ்ந்தார். மகனிடம், 'நீ எங்கிருக்கிறாய், என்ன செய்கிறாய்' என, விசாரித்தபோது, பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் இருப்பதாக கூறினான்.
உடனடியாக பெங்களூரு சென்ற சரணப்பா, கே.ஆர்.எஸ்., கட்சி தொண்டர்கள் உதவியுடன், மகனை கண்டுபிடித்து, கலபுரகிக்கு அழைத்துச் சென்றார்.
வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் தண்டவாளம் மீதே நடந்து, கலபுரகி மாவட்டம், அப்சல்புரா தாலுகாவின், கானகாபுரா ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து ரயிலில் மும்பைக்கு சென்றுள்ளான். அங்கு ஹோட்டல் ஒன்றில் 14 மாதங்களாக பணியாற்றிய சிறுவன், சம்பாதித்த பணத்தை வங்கியில் சேமிக்க முடிவு செய்தான்.
இதற்காக வங்கியில் கணக்கு துவக்க விண்ணப்பித்தான். விண்ணப்பத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது என்பதால், தன் தந்தையின் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் தந்தையை சிறுவன் தொடர்பு கொண்டது தெரியவந்தது.