தடுப்பு காவல் மையத்தில் இருந்து வெளிநாட்டு பெண்கள் நால்வர் ஓட்டம்
தடுப்பு காவல் மையத்தில் இருந்து வெளிநாட்டு பெண்கள் நால்வர் ஓட்டம்
ADDED : மே 17, 2026 11:23 PM
கொத்தனுார்: தடுப்பு காவல் மையத்தின் ஜன்னல் கம்பியை முறித்து வெளியே குதித்து, வெளிநாட்டு பெண்கள் நான்கு பேர் தப்பி சென்று உள்ளனர். அவர்களை தேடும் பணி நடக்கிறது.
விசா காலம் முடிந்ததும், பெங்களூரில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை போலீசார் கண்டுபிடித்து, வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். இவர்களை நாடு கடத்துவதற்காக தடுப்பு மையத்தில் தங்க வைக்கின்றனர்.
இதுபோல, கொத்தனுாரில் உள்ள தடுப்பு காவல் மையத்திலும் உகாண்டா, நைஜீரியா, கானா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொத்தனுார் தடுப்பு காவல் மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த உகாண்டா, நைஜீரியா நாடுகளை சேர்ந்த டோபிஷ்டா, நாகவா, சபினா, பிடினா ஆகிய நான்கு பெண்கள், கடந்த 11ம் தேதி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இரண்டாவது மாடியில் உள்ள அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த நான்கு பேரும், தங்கள் அறையின் ஜன்னல் கம்பியை முறித்து அதன் வழியாக வெளியே எகிறி குதித்து தப்பி சென்றது தெரிந்து உள்ளது. இதுகுறித்து கொத்தனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நான்கு பெண்களையும் தேடுகின்றனர்.
தப்பி சென்ற பெண்களுக்கும், போதை பொருள் வலையமைப்பினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்து உள்ளது.
