/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் நால்வர் பலி
/
கார் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் நால்வர் பலி
கார் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் நால்வர் பலி
கார் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் நால்வர் பலி
ADDED : ஜூலை 01, 2025 03:32 AM
துமகூரு: குனிகல் நகர் அருகில் சென்று கொண்டிருந்த கார் மீது, லாரி மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
ராம்நகர் மாவட்டம், மாகடி தாலுகாவின், நடராஜா லே - அவுட்டில் வசித்தவர் சீபே கவுடா, 45. இவர் பாரத் கூட்டுறவு வங்கியில் இயக்குநராக பணியாற்றினார்.
இவரது மனைவி ஷோபா, 40. தம்பதிக்கு தும்பிஸ்ரீ, 19, வர்ணஸ்ரீ, 21, என்ற மகள்களும், பானுகிரண் கவுடா, 15, என்ற மகனும் இருந்தனர்.
வர்ணஸ்ரீ பெங்களூரின் தயானந்த சாகர் கல்லுாரியில் படிக்கிறார். விடுதியில் தங்கியுள்ளார். தும்பிஸ்ரீ, பெங்களூரின் குளோபல் கல்லுாரியில் படித்து வந்தார்.
மகன் பானுகிரண், துமகூரு மாவட்டம், குனிகல்லில் உள்ள தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். பள்ளி விடுதியில் தங்கியிருந்தார்.
ஞாயிறு விடுமுறை என்பதால், மகனும், மகள்களும் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இரவு உணவு முடிந்ததும், வர்ணஸ்ரீ பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றார். அதன்பின் மகனை பள்ளி விடுதியில் விட்டு வருவதற்காக, சீபே கவுடா காரில் புறப்பட்டார்.
தாங்களும் வருவதாக கூறி, மனைவியும், மகள் தும்பிஸ்ரீயும் உடன் சென்றனர்.
இரவு 9:00 மணியளவில், குனிகல்லின் தேசிய நெடுஞ்சாலை - 75ல், பிதனகெரே பைபாஸ் அருகில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது.
தம்பதியும், பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஞாயிறு என்பதால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இருந்தது. விபத்து ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணிக்கணக்கில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தகவலறிந்து அங்கு வந்த குனிகல் போலீசார், நால்வரின் உடல்களை மீட்டனர். காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.