/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளி மாணவர்களுக்கு இலவச ரத்த பரிசோதனை
/
பள்ளி மாணவர்களுக்கு இலவச ரத்த பரிசோதனை
ADDED : ஜூலை 24, 2025 04:36 AM

பெங்களூரு : “மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 55 லட்சம் மாணவர்களுக்கு இலவச ரத்த பரிசோதனை செய்யப்படும். ரத்த சோகை உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்,” என, மாநில சுகாதாரம், குடும்ப நலத்துறையின் முதன்மை செயலர் ஹர்ஷா குப்தா கூறி உள்ளார்.
கர்நா டகாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தடுப்பதற்காக, 'ரத்த சோகை இல்லாத ஊட்டச்சத்து கர்நாடகா' எனும் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் மூலம், மாணவர்களுக்கு இலவசமாக ரத்த பரிசோதனை செய்யப்படும்.
அப்போது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் மாணவர்கள் கண்டறியப்படுவர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் ரத்த சோகை பாதிப்பில் இருந்து, மாணவர்களை காப்பாற்ற முடியும்.
இதுகுறித்து சுகாதாரம், குடும்ப நலத்துறையின் முதன்மை செயலர் ஹர்ஷா குப்தா கூறியதாவது:
ரத்த சோகை உள்ள மாணவர்களின் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். இதனால், மாணவர்களுக்கு தலைசுற்றல், விரைவில் சோர்வு அடைவது, பலவீனம், சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்டவை ஏற்படலாம்.
மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தடுக்க வேண்டும். இதற்காக, கர்நாடகாவில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவச ரத்த பரிசோதனை செய்யப்படும்.
மாநிலத்தில் உள்ள 55 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும். ரத்த சோகை உள்ள மாணவர்கள் கண்டறியப்படுவர். ரத்த சோகையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தாலுகா அல்லது மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், லேசாக பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப சுகாதரா மையங்களுக்கும் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும். ரத்த பரிசோதனையின்போது, ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களும் நடத்தப்படும். இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.