இலவச 'பஸ் பாஸ்' விண்ணப்பம் 'ஆன்லைனில்' பதிவு துவக்கம்
இலவச 'பஸ் பாஸ்' விண்ணப்பம் 'ஆன்லைனில்' பதிவு துவக்கம்
ADDED : ஜூன் 29, 2026 10:41 PM
பெங்களூரு: பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இலவச 'பஸ் பாஸ்' பெறுவதற்கான விண்ணப்ப பதிவு 'ஆன்லைனில்' நேற்று துவங்கியது.
கர்நாடகாவில் அரசு, தனியார் என அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியரும் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என மாநில அரசு, கடந்த 12ம் தேதி அறிவித்தது.
இதற்காக, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இலவச பஸ் பாஸ்களுக்கான விண்ணப்ப பதிவு நேற்று, ஆன்லைனில் துவங்கியது.
இதை தொடர்ந்து, பல மாணவர்களும் அரசின் அதிகாரப்பூர்வ, 'சேவா சிந்து' இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
பஸ் பாஸ் பெற, மாணவர்கள் இல்லத்திற்கும், படிக்கும் கல்வி நிறுவனத்திற்கும் இடையே அதிகபட்சம் 60 கி.மீ., துாரம் மட்டுமே இருக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது.
அதே சமயம், பள்ளி, கல்லுாரிகள் கடந்த 1ம் தேதியே துவங்கிவிட்டதால், 19,792 மாணவர்கள் பணம் செலுத்தி பஸ் பாஸ் வாங்கிவிட்டனர்.
பஸ் பாஸ் பெற மாணவர்கள் செலுத்திய தொகை அடுத்த ஏழு நாட்களுக்குள், அவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
