/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளிருக்கு இலவச பஸ்: ஆய்வில் அதிரடி தகவல்
/
மகளிருக்கு இலவச பஸ்: ஆய்வில் அதிரடி தகவல்
ADDED : ஏப் 02, 2025 06:17 AM

கலபுரகி : அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தால், கூலி வேலை, பணிக்கு செல்லும் பெண்கள் பயனடைந்து உள்ளனர். டிக்கெட்டுக்கான கட்டணத்தில் வீட்டுக்கு தேவையான மற்ற பொருட்கள் வாங்க உதவியாக இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கல்யாண கர்நாடகா
கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் 'சக்தி' திட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது. இத்திட்டம், பெண்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பை பெற்றுள்ளது என்பதை கண்டறிய, கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.
இதற்கான பணியை, 'பிஸ்கல் பாலிசி இன்ஸ்டிடியூட்', 'பேர் பிரீ பப்ளிக் டிரான்சிட் உமன்ஸ் எக்கனாமிக் பார்ட்டிசிபேஷன்', 'சக்தி காரண்டி ஸ்கீம் சர்வே' ஆகிய அமைப்புக்கு கொடுத்தது.
இந்த அமைப்புகள், 112 சட்டசபை தொகுதிகளில், 25,925 பேரிடம் ஆய்வு நடத்தின. இதில், கிடைத்த தகவல்கள் விபரம்:
சக்தி திட்டத்துக்கு முன்னர், 25.3 சதவீதம் பெண் கூலித் தொழிலாளர்கள் அரசு பஸ்களில் பயணம் செய்தனர். இது, திட்டம் அறிமுகத்துக்கு பின், 30.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதுபோன்று பணிக்குச் செல்லும் பெண்கள், எண்ணிக்கை முன்னர் 26.7 சதவீதமாக இருந்தது; தற்போது 28.8 சதவீதமாகி அதிகரித்துள்ளது.
திட்டத்துக்கு முன்பு, பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 55.27 சதவீதமாக இருந்தது. தற்போது 64.43 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வீட்டு செலவு
இத்திட்டத்தால், பஸ் கட்டணத்துக்கான தொகை சேமிக்கப்பட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க உதவியாக இருப்பதாக, 57.45 சதவீதம் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் இத்திட்டம் அறிமுகமான பின், பெண்கள் தேவையின்றி பஸ்களில் செல்வதும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் இத்திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த பெண்கள், தற்போது ஆதரவாக பதிலளித்துள்ளனர்.
இத்திட்டம் தேவையற்ற பயணங்களுக்கு வழிவகுக்கும் என்று ஆரம்பத்தில் 72 சதவீதம் ஆண்கள் கூறியிருந்தனர். தற்போது 71 சதவீதமாக குறைந்துள்ளது.
பஸ் கட்டணம் செலுத்தாததால், அதற்கான தொகை, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ செலவு, கல்விக்கு உதவுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் துறைக்கு வருவாய் அதிகரிப்பதுடன், போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்குவதில் அரசின் சுமை குறைகிறது.
வரும் நாட்களில் இத்திட்டத்தால் சமூக நலன்களை காணலாம். பொது இடங்களுக்கு பெண்களின் வருகை, சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு, பொருளாதாரம் அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் தெரியவந்துள்ளது.