ADDED : ஆக 15, 2026 11:33 PM
- நமது நிருபர் -:
சுதந்திர தினத்தை ஒட்டி, பெங்களூரு விதான் சவுதா முன் அம்பேத்கர் வீதியில் நடந்த 'பிரீடம் ஹப்பா' எனும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, உற்சாகமடைந்தனர்.
பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா உத்தரவின்படி, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சார்பில் நேற்று நடத்தியது.
இவ்விழாவில் பங்கேற்க பதிவு செய்தவர்கள், காலை முதலே வர துவங்கினர். முன்பதிவு செய்து வந்தவர்களின் 'கியூஆர் கோடு'களை ஸ்கேன் செய்தும், அவர்களை போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.
உள்ளே நுழைந்ததும், கு ழந்தைகளுக்கென பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என தனித்தனியாக பல்வேறு விதமான 19 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதை கடந்து சென்றால், அரசியல் அமைப்பு தொடர்பான தகவல்கள் கன்னடம், ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தன.
அதன் பின், விதான் சவுதா, விகாஸ் சவுதா இடையே உள்ள மஹாத்மா காந்தி சிலையை சுற்றிலும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய படங்கள், தகவல்கள் இடம் பெற்றிருந்தது.
கலைப்பு போக்க, உணவு ஸ்டால்கள், ஐஸ்கிரீம் கடைகள், நந்தினி ஸ்டால்கள் இருந்தன. காலை முதலே கர்நாடகத்தின் பல்வேறு பாரம்பரிய கலை ஞர்களின் நடனம் இடம்பெற்றது. விழாவுக்கு வந்தவர்கள், இவர்களுடன் 'செல்பி', குழு படம் எடுத்து கொண்டனர்.
விதான் சவுதா அருகில், ஹப்பா செல்பி பாயின்ட் அமைத்திருந்தனர். முதல்வர் சிவகுமார் உட்பட பலரும் அதில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
குழந்தைகளுக்கு கித்துார் ராணி சென்னம்மா, கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணா என பல சுதந்திர போராட்ட வீரர்களின் வேடம் அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.
மாலை சுதந்திர ஊர்வலம் நடந்தது. இதை துவக்கி வைத்த முதல்வர் சிவகுமார், பட்டுவேஷ்டி அணிந்து அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா ஊர்வலமாக நடந்து சென்றார்.
அதனை தொடர்ந்து துளுநாடு, குடகு, கேரளம், ஆந்திரா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, ஒடிஷா, பீஹார், மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், சிந்தி, சிக்கிம் ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.
பஞ்சாப்பை சேர்ந்த சிறு குழந்தை, கையில் வாளுடன் செய்த சாகசங்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
இரவு பிரபல பின்னணி பாடகர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. நிறைவில் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நன்றி தெரிவித்தார்.
