வரும் 26ல் கஜ பயணம் துவக்கம்; வனத்துறை அதிகாரிகள் தகவல்
வரும் 26ல் கஜ பயணம் துவக்கம்; வனத்துறை அதிகாரிகள் தகவல்
ADDED : ஆக 22, 2026 01:30 AM
மைசூரு: தசரா பண்டிகையில் பங்கேற்க முதற்கட்டமாக, 14 யானைகள், வரும் 26ம் தேதியன்று, மைசூருக்கு பயணத்தை துவக்கவுள்ளன. முதற்கட்டமாக, ஒன்பது யானைகள் செல்கின்றன.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தசரா பண்டிகைக்கு மைசூரு தயாராகி வருகிறது. தசராவில் ஜம்பு சவாரி மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். இதில் பங்கேற்கும் யானைகளின் பயணம், வரும் 26ம் தேதியன்று துவங்கவுள்ளது.
வனத்தில் இருந்து நகருக்கு வரும் யானைகளுக்கு, ஹுன்சூர் தாலுகாவின், வீரனஹொசள்ளியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.சம்பிரதாயப்படி, யானைகளுக்கு பூஜைகள் நடக்கும்.
அதன் பின், இங்கிருந்து லாரிகளின் மூலம், மைசூரின் அசோக்புரத்தில் உள்ள வன பவனுக்கு அழைத்து வரப்படும். இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின், மைசூரு அரண்மனை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டு, தசராவுக்கு தயாராக்கப்படும்.
இம்முறை தசராவுக்கு, 14 யானைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 12 யானைகள் ஜம்பு சவாரியில் பங்கேற்கும். கூடுதலாக இரண்டு யானைகள் இருக்கும். ஒருவேளை ஜம்பு சவாரியில் பங்கேற்கும் யானை உடல் ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டால், கூடுதல் யானைகள் பயன்படுத்தப்படும்.
முதற்கட்டமாக, துபாரே முகாமில் இருந்து தனஞ்செயா, பிரசாந்த், கோபி, ஸ்ரீராமா, சுக்ரீவா, காவேரி, பள்ளே முகாமில் இருந்து மகேந்திரா, லட்சுமி, மத்திகோடு முகாமில் இருந்து ஏகலவ்யா ஆகிய ஒன்பது யானைகள், ஆகஸ்ட் 26ல் மைசூருக்கு செல்கின்றன.
இரண்டாம் கட்டத்தில், தொட்ட அரவே முகாமில் இருந்து ரூபா, ராமாபுரா முகாமில் இருந்து சைத்ரா, மத்திகோடு முகாமில் இருந்து ஸ்ரீகண்டா, பீமா, ஹர்ஷா செல்கின்றன.
இம்முறை பீமா யானை, நேரடியாக ஜம்பு சவாரியில் பங்கேற்காமல், கூடுதல் யானையாக ஹர்ஷாவுடன் இருக்கும். 26 வயதான பீமா மிகவும் சாதுவானது. சாலையில் செல்லும் போது, 'பீமா' என, அழைத்தால் திரும்பி பார்க்கும் குணம் கொண்டது.
இது அனைவரையும் கவர்ந்தது; ஆனால், தற்போது பீமாவுக்கு மதம் பிடித்துள்ளதால், கண்காணிப்பில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
