திருமலைக்கு வழங்கப்படும் திருக்குடைகளுக்கு பானஸ்வாடி பாலாஜி கோவிலில் நாளை பூஜை
திருமலைக்கு வழங்கப்படும் திருக்குடைகளுக்கு பானஸ்வாடி பாலாஜி கோவிலில் நாளை பூஜை
ADDED : ஆக 22, 2026 01:29 AM

பானஸ்வாடி: திருப்பதி திருமலையில் நடக்கும் வருடாந்திர பிரம்மோத்சவத்திற்கு, நன்கொடையாக வழங்கப்படும் திருக்குடைகளுக்கு, பெங்களூரு பானஸ்வாடி பாலாஜி கோவிலில், நாளை பூஜை செய்யப்படுகிறது.
பெங்களூரு தொட்ட பானஸ்வாடியில் உள்ள ஹிந்து ஆம்யாத்மிக சேவா அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:
திருப்பதி திருமலையில் நடக்கும் வருடாந்திர பிரம்மோத்சவத்தில், மாட வீதியில் சுவாமி உலா வரும் போது, வாகன சேவைக்காக பயன்படுத்தப்படும் திருக்குடைகளை, கடந்த ஐந்து ஆண்டுகளாக, எங்கள் அறக்கட்டளை சார்பில் நன்கொடையாக வழங்குகிறோம்.
அடுத்த மாதம், 2ம் தேதி நடக்கவுள்ள வருடாந்திர பிரம்மோத்சவத்தின் வாகன சேவைக்கு பயன்படுத்த, நான்கு திருக்குடைகளை கும்பகோணத்தில் தயார் செய்து எடுத்து வந்துள்ளோம். ஒவ்வொரு குடையும், 40,000 ரூபாய் விலை கொண்டது. குடைகளை செய்ய குறைந்தபட்சம் 45 நாட்கள் வரை தேவைப்படுகிறது.
அடுத்த மாதம், 1ம் தேதி, ஆறு டெம்போ டிராவலர் வாகனத்தில் 80 பேர், இங்கிருந்து திருக்குடைகளுடன் சென்று திருப்பதி திருமலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம்.
வரும் 23ம் தேதி ராமமூர்த்திநகர் மெயின் ரோடு பானஸ்வாடி பாலாஜி திருக்கோவிலில், திருக்குடைகளுக்கு பரிவாரம் கட்டி சிறப்பு பூஜை செய்கிறோம். திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்படுகிறது.
காலை 9:00 மணியில் இருந்து நிகழ்ச்சி துவங்குகிறது. பக்தியில் இருக்கும் போது எல்லாம் கொடுக்க வேண்டும் என்று ராமானுஜர் கூறுவார். இதன் அடிப்படையில் தான் திருக்குடைகளை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
