ரூ.18 லட்சம் மதிப்பு மொபைல்கள் திருடிய கும்பலின் தலைவன் கைது
ரூ.18 லட்சம் மதிப்பு மொபைல்கள் திருடிய கும்பலின் தலைவன் கைது
ADDED : ஏப் 01, 2026 03:48 AM

பெங்களூரு: கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்களிடம் நடந்த மிகப்பெரிய மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 21 மொபைல் போன்களை மீட்டனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், கடந்த மாதம், 28ம் தேதி நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்தனர்.
போட்டியை காண வந்த ரசிகர்களின் மொபைல் போன்கள் திருடு போயின. அவர்கள், கப்பன் பார்க் போலீசில் புகார் அளித்தனர். 20 மொபைல் போன்கள் திருடப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்ததால், போலீசார் விசாரித்தனர்.
மைதானத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், புகார் அளித்தவர்களிடமும் விசாரித்தனர். இதில், கிடைத்த தகவலின்படி போலீசார் திருட்டில் ஈடுபட்டது மிகப்பெரிய கும்பல் என்பதை கண்டறிந்தனர்.
அந்த கும்பலின் தலைவனான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் குமாரை, 26, கைது செய்தனர். 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 21 மொபைல் போன்களை மீட்டனர். அவரிடம் முறைப்படி விசாரித்ததில் பல தகவல்கள் கிடைத்தன.
மொபைல் போன் திருட்டில் ஈடுபடுவதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, 11 சிறுவர்கள், பெங்களூருக்கு கடந்த, 27ம் தேதி அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை சுபம் குமார் செய்து கொடுத்துள்ளார்.
இச்சிறுவர்களே மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். சிறுவர்கள் கூட்டத்தில் எளிதாக மொபைல் போன்களை திருடி தப்பியுள்ளனர். இதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 11 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட மொபைல் போன்கள் நேற்று பெங்களூரு நகர கமிஷனர் அலுவலகத்தில் காட்சி படுத்தப்பட்டன. கமிஷனர் சீமந்த் குமார் சிங் கூறியதாவது:
மொத்தம், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 21 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. திருட்டு கும்பலின் தலைவன், திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருட்டு கும்பலில் மேலும் சிலர் வெளியே இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு கூறினார்.
