வாலிபரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலுக்கு வலை
வாலிபரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலுக்கு வலை
ADDED : ஏப் 14, 2026 05:58 AM
மைசூரு: நஞ்சன்கூட்டில், 90 சதவீதம் பார்வை குறைபாடு உள்ள இளைஞரை கடத்தி, அவரை திருநங்கையாக மாற்றி, பிச்சை எடுக்க வைத்ததுடன், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய, திருநங்கையர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தியாகராஜா காலனியை சேர்ந்தவர் அனில் குமார், 28. இவருக்கு, 90 சதவீத பார்வை குறைபாடு உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன், மைசூரு கிராமப்புற பஸ் நிலையம் அருகே நின்றிருந்த போது, திருநங்கை அனிதா என்பவரும், அவரது கும்பலை சேர்ந்தவர்களும், அனில்குமாரை வலுக்கட்டாயமாக காரில் மங்களூருக்கு கடத்தி சென்றனர்.
அங்கு அவருக்கு சேலை, நைட்டி, காதணிகள், மூக்குத்தி அணிவித்து, அவருக்கு, 'அக் ஷிதா' என்று பெயர் சூட்டினர். பின், மங்களூரு தெருக்களில் உள்ள கடைகளில் பணம் வசூலிக்கும்படி மிரட்டினர்.
இதனால், தினமும், 2,000 முதல், 3,000 ரூபாய் வரை வசூலித்து தந்தார். அவரை, 'ரீல்ஸ்' செய்ய வைத்து, அதனை சமூக ஊடகங்களில், திருநங்கை அனிதா பதிவேற்றினார். மங்களூரிலும் பின், கேரளாவிற்கும் அவரை அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.
அனிலின் ஆதார் அட்டையில், அவரது பாலினத்தை திருநங்கை என்று மாற்றிய அனிதா கும்பல், அரசின் சமூக நலத்துறையிடம் இருந்து அதிகாரபூர்வமாக சான்றிதழையும் பெற்றிருந்தது. இதையடுத்து வரும் மே மாதம் அவரை மும்பைக்கு அழைத்து சென்று, நிரந்தர பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இதையறிந்த அனில் குமார், தான் இதுவரை சம்பாதித்த மூன்று லட்சம் ரூபாயை வழங்கும்படி, அனிதாவிடம் கேட்டார். அதற்கு அனிதாவோ, 'பணம் தர முடியாது. மீறி கேட்டால், என் வீட்டில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய், தங்க நகைகளை திருடியதாக புகார் அளித்து விடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
இதையடுத்து, அனிதா கும்பலிடமிருந்து தப்பித்த அனில், நஞ்சன்கூடுக்கு சென்றார். கோபமடைந்த அனிதா, தன் சகாக்களை நஞ்சன்கூடுவில் உள்ள அனிலின் வீட்டிற்கு அனுப்பி, தகராறு செய்துள்ளார்.
பொறுமை இழந்த அனில், மைசூரில் உள்ள லஷ்கர் போலீசில் புகார் அளித்தார், அதில், 'அனிதா தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், மீண்டும் தொழிலுக்கு திரும்பும்படியும் அழுத்தம் கொடுக்கிறார். இது தொடர்பாக நஞ்சன்கூடு போலீசில் புகார் அளித்தும் அவர்கள் ஏற்கவில்லை' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதையடுத்து, லஷ்கர் போலீசார் திருநங்கை அனிதா மற்றும் அவரின் கும்பல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
