/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
17 கிலோ நகை கொள்ளையடித்த கும்பல் சிக்காமல் இருக்க கோவிலில் சாமி தரிசனம்
/
17 கிலோ நகை கொள்ளையடித்த கும்பல் சிக்காமல் இருக்க கோவிலில் சாமி தரிசனம்
17 கிலோ நகை கொள்ளையடித்த கும்பல் சிக்காமல் இருக்க கோவிலில் சாமி தரிசனம்
17 கிலோ நகை கொள்ளையடித்த கும்பல் சிக்காமல் இருக்க கோவிலில் சாமி தரிசனம்
ADDED : ஏப் 02, 2025 06:10 AM

தாவணகெரே: வங்கியில் 13 கோடி ரூபாய் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைதான ஆறு பேரும் போலீசிடம் சிக்கி விட கூடாது என்பதற்காக, தாவணகெரேயில் உள்ள சக்தி வாய்ந்த சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தரிசனம் செய்தது தெரிந்து உள்ளது.
தாவணகெரே நியாமதியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான 17 கிலோ தங்கநகைகள் கொள்ளையடித்த வழக்கில், தமிழகத்தின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் விஜய்குமார், 30, அஜய்குமார், 28, இவர்களின் உறவினர் பரமானந்தா, 30, நியாமதியின் அபிஷேக், 23, சந்துரு, 23, மஞ்சுநாத், 43 ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் உசிலம்பட்டியில் உள்ள, 30 அடி ஆழ கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது.
கடன் மறுப்பு
இதுகுறித்து கிழக்கு மண்டல ஐ.ஜி., ரவிகாந்தேகவுடா அளித்த பேட்டி:
நியாமதியில் பேக்கரி கடை நடத்திய விஜய்குமார் தொழிலை விரிவுபடுத்த, எஸ்.பி.ஐ., வங்கியில் கடன் கேட்டார். ஆனால் வங்கி ஊழியர்கள் கடன் கொடுக்க மறுத்தனர். இதுவே வங்கி கொள்ளைக்கு முக்கிய காரணம்.
விஜய்குமாருக்கு எளிதில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டார். இதற்கு தனது சகோதரர், உறவினர், நண்பர்கள் உதவியை நாடினார். அவர்களும் ஒப்பு கொண்டனர்.
கொள்ளையடிக்க தேவையான பொருட்களை ஷிவமொக்கா, நியாமதியில் சென்று வாங்கினர். விஜய்குமாருக்கு அந்த வங்கியில் கணக்கு இருந்தது. இதனால் அடிக்கடி வங்கிக்கு சென்று வந்தார். வங்கிக்குள் எப்படி நுழையலாம்; லாக்கர் எங்கு உள்ளது என்பது பற்றி அறிந்து கொண்டார்.
காக்ரல் கும்பல்
வங்கியை சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் போலீசார் ரோந்து எப்போது வருவர் என்பதையும் விஜய்குமார் அறிந்து கொண்டார். வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்த பின், குரங்கு தொப்பி, கையுறைகள், அணிந்திருந்த கருப்பு நிற ஆடைகள், கியாஸ் கட்டர், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை ஏரியில் வீசினர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெட்டிகளில் வைத்து கொண்டு பின்பக்கம் வழியாக தப்பி சென்றனர். பெட்டிகளை ஒரு காரின் டிக்கியில் வைத்து இருந்தனர். கொள்ளையடித்தவர்கள் குறித்து போலீசாருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு ஷிவமொக்கா பத்ராவதியில் உள்ள வங்கியில் இதே பாணியில் கொள்ளை நடந்தது. அந்த கொள்ளையில் உத்தர பிரதேச மாநிலத்தின் படாய் மாவட்டம், காக்ரல் கிராமத்தை சேர்ந்த கும்பல் ஈடுபட்டது தெரிந்தது.
இதனால் இந்த கொள்ளையிலும் கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று நினைத்து, போலீசார் அங்கு சென்றனர். ஒரு மாதம் அங்கு முகாமிட்டு விசாரித்தனர். எந்த ஆதாரமும் சிக்கவில்லை.
தலா ரூ.1 லட்சம்
கடந்த பிப்ரவரி மாதம் கேரளா, ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ஆந்திராவுக்கும் போலீஸ் குழு சென்றது. கடந்த மாதம் காக்ரல் கொள்ளை குழு, கர்நாடகா வந்தது பற்றி தகவல் கிடைத்தும், மாநிலத்தின் உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஒரு சோதனை சாவடியில் காக்ரல் கொள்ளை கும்பல் சிக்கியது.
அவர்களிடம் விசாரித்த போது, நியாமதி வங்கி கொள்ளையில் தொடர்பு இல்லை என்று தெரிந்தது. இதன் பின்னரே கொள்ளையில் உள்ளூர் நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. மஞ்சுநாத் என்பவரை கைது செய்த போது, கொள்ளை பற்றி தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்படி ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து விற்று, அதில் கிடைத்த 3 லட்சம் ரூபாயில் தலா 1 லட்சம் ரூபாயை அபிஷேக், மஞ்சுநாத், சந்துருவுக்கு கொடுத்தது தெரியவந்தது. கிணற்றில் பெட்டியுடன் வீசப்பட்ட நகைகளை, சில மாதங்களுக்கு பின் மேலே எடுத்து கொள்ளலாம் என்று, விஜய்குமார் முடிவு செய்ததும் தெரியவந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொள்ளையடித்த பின், போலீசாரிடம் சிக்கி விட கூடாது என்பதற்காக, தாவணகெரேயில் உள்ள சக்தி வாய்ந்த சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆறு பேரும் தரிசனம் செய்துள்ளதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

