தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பொது இடங்களில் குப்பை: புகார் அளிக்க வாட்ஸாப் எண் அறிமுகம்

பொது இடங்களில் குப்பை: புகார் அளிக்க வாட்ஸாப் எண் அறிமுகம்

பொது இடங்களில் குப்பை: புகார் அளிக்க வாட்ஸாப் எண் அறிமுகம்


ADDED : ஜூன் 13, 2025 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் குப்பை பிரச்னை குறித்து, புகார் அளிக்க மாநகராட்சி 'வாட்ஸாப்' எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

பெங்களூரை குப்பையில்லாமல், துாய்மையாக வைத்திருக்க மாநகராட்சி போராடுகிறது. ஆனால் அது முடியவில்லை. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமும், மக்களின் ஒத்துழையாமையும் முக்கியமான காரணம். சாலை ஓரங்கள், பூங்காக்கள், மழைநீர்க்கால்வாய், காலி மனைகள் உட்பட, கண்ட, கண்ட இடங்களில் குப்பையை மக்கள் கொட்டுகின்றனர். இது மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

கட்டடக் கழிவுகளும் கால்வாய்களில் கொட்டப்படுகின்றன. இதனால் மழைநீர் பாய வழியில்லாமல், சாலையில் பாய்கிறது. இது போன்று குப்பை, கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது குறித்து புகார் அளிக்க, புதிதாக வாட்ஸாப் எண்ணை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், தினமும் ஆட்டோ டிப்பர்களில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர். ஆனால் பலரும் இந்த வாகனங்களில், குப்பையை போடாமல் இரவு நேரத்திலோ அல்லது பணிக்கு செல்லும் போதோ, பிளாஸ்டிக் கவர்களில் குப்பையை நிரப்பி, பொது சாலைகளில் போட்டுச் செல்கின்றனர்.

கட்டட கழிவுகளையும், காலி மனைகள், மழைநீர்க் கால்வாய்களில் கொட்டுவது, எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. கண்ட இடங்களில், குப்பை, கட்டடக் கழிவுகளை கொட்டுவதால் நகரின் அழகு பாழாகிறது. இதற்கு தீர்வு காண, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்ட இடங்களில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டுவதை கண்டால், மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக 94481 97197 என்ற வாட்ஸாப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் படங்களுடன் புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பர். 'பிளாக் ஸ்பாட்'கள் உருவாவதையும் தவிர்க்கலாம்.

பெங்களூரை அழகாக வைத்துக் கொள்ள, துப்புரவு தொழிலாளர்கள் உழைக்கின்றனர். ஆனால் பொது மக்கள், கண்ட இடங்களில் குப்பை கொட்டுகின்றனர். இது போன்று செய்தால், அபராதம் விதிக்கப்படும். வீட்டு வாசலுக்கு வரும் குப்பை வாகனங்களில், மக்கள் குப்பையை போட வேண்டும். நகரை சுத்தமாக வைத்திருக்க, மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us