காலி மனைகளில் குப்பை இருந்தால் இடத்தின் அளவுக்கு ஏற்ப அபராதம்
காலி மனைகளில் குப்பை இருந்தால் இடத்தின் அளவுக்கு ஏற்ப அபராதம்
ADDED : ஆக 28, 2026 02:22 AM
பெங்களூரு: பெங்களூரில் காலி மனைகளை துாய்மை செய்யும் பணிகளை, ஜி.பி.ஏ., நேற்று துவக்கியது. அப்போது, 'இடத்தின் அளவுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும்' என, அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா அறிவித்துள்ளார்.
பெங்களூரில் கழிவுகளிலிருந்து விடுதலை எனும் துாய்மை இயக்கம். கடந்த 1ம் தேதி துவங்கியது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக காலி மனைகளில் உள்ள குப்பை அகற்றப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. குப்பை அகற்ற நேற்று முன்தினம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதையடுத்து, காலி மனைகளில் உள்ள குப்பை அகற்றும் பணியை, ஜி.பி.ஏ., நேற்று துவங்கியது. முதல் கட்டமாக, தொம்லுார் லே - அவுட் சர்வீஸ் ரோடு பகுதியில் உள்ள காலி மனையை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.
பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், ஷாந்திநகர் காங்., - எம்.எல்.ஏ., ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொக்லைன் உதவியுடன்துாய்மை பணிகள் நடந்தன.
இதுகுறித்து, அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறியதாவது :
பெங்களூரில் காலி மனைகளை சுத்தம் செய்ய நிறைய அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், காலி மனைகளை சுத்தம் செய்யாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து மாநகராட்சிகளிலும் காலி மனைகளை சுத்தம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன.
இடத்தின் அளவை பொருத்து அபராதம் விதிக்கப்படும்.சிறிய மனைகளில் குப்பை அகற்ற, 6,700 ரூபாய் அபராதம்; குப்பையை வாகனங்களில் கொண்டு செல்ல போக்குவரத்து செலவு 19,000 ரூபாய் வரை ஆகலாம்.
இது, தோராயமான அபராத கணக்கு.25,900 ரூபாய் முதல், 1.73 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.
இதுவரை சுத்தம் செய்யாத 41 காலி மனை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
நமது நாடு, நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தங்க முட்டை இடும் வாத்தாக பெங்களூரு இருக்கிறது. பெங்களூரை துாய்மையாக வைத்திருப்பது அனைவரின் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
