101 தாலுகாக்களில் வறட்சி பாதிப்பு கர்நாடக அரசு அறிவிப்பு
101 தாலுகாக்களில் வறட்சி பாதிப்பு கர்நாடக அரசு அறிவிப்பு
ADDED : ஆக 28, 2026 02:22 AM
பெங்களூரு: ''கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால், 101 தாலுகாக்கள் வறட்சியால் பாதிப்படைந்துள்ளன,'' என, மாநில துணை முதல்வர் பரமேஸ்வர் கூறினார்.
இது குறித்து, விதான் சவுதாவில் வருவாய் துறை அமைச்சருமான, துணை முதல்வர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
மாநிலத்தில், 101 தாலுகாக்கள், வறட்சியால் பாதிப்படைந்துள்ளன. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 12 வரையிலான மழை பற்றாக்குறை குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. 134 தாலுகாக்களில் மழை பற்றாக்குறை, தீவிரமாக உள்ளது. இந்த தாலுகாக்களை வறட்சி பாதித்த தாலுகாக்களாக அறிவிக்கலாம் என, கருதினோம்.
இதை உறுதி செய்து கொள்ள, மீண்டும் ஆய்வு செய்ததில், 101 தாலுகாக்கள் வறட்சி என, அறிவிக்க தகுதி பெற்றுள்ளன. 89 தாலுகாக்களில் தீவிரமான வறட்சியும், 12 தாலுகாக்களில் சாதாரண வறட்சியும் உள்ளன.
வறட்சி பாதிப்பு பகுதிகளை அறிவிக்க, சில நெறிமுறைகள் உள்ளன. மழை பற்றாக்குறையால், பயிர்கள் காய்ந்துள்ளன. ராகி, நெல், துவரை, மக்காச்சோளம் பயிர்கள் காய்ந்துள்ளன. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என, பல்வேறு பயிர்களும் காய்ந்துள்ளன.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எப்போதும் இந்த அளவுக்கு குறைந்தது இல்லை. 1,000 அடிகளுக்கும் அதிகமாக, கீழே சென்றுள்ளது. அணைகளில் கடந்தாண்டு 815.7 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது.
இம்முறை 684 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. கே.ஆர்.எஸ்., அணையில் 61 சதவீதம், கபினியில் 66 சதவீதம் தண்ணீர் இருப்புள்ளது.
ஹேமாவதியில் 83 சதவீதம், ஹாரங்கியில் 99 சதவீதம் நீர் இருப்புள்ளது. கட்டபிரபாவில் 100 சதவீதம், பத்ராவில்81 சதவீதம், துங்கபத்ராவில் 90 சதவீதம், நாராயணபுராவில் 100 சதவீதம், அலமாட்டியில் 99 சதவீதம் நீர் உள்ளது.
மாநிலத்தின் மொத்த அணைகளில் 76 சதவீதம் நீர் உள்ளது. குடிநீருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள் வற்றுகின்றன. குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு, டேங்கர் மூலமாக குடிநீர் வினியோகிக்கிறோம்.
எனினும், குடிநீர் வினியோகிக்க, பற்றாக்குறை இல்லை. மாவட்ட கலெக்டர்களுக்கு 117 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளளது.
ஒவ்வொரு தொகுதிகளுக்கும், 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை குடிநீர் நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இம்மாதம் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், வறட்சி அறிக்கையை அளித்துள்ளோம்.
கடந்தாண்டு மத்திய அரசு, மாநிலத்துக்கு 3,500 கோடி ரூபாய் வழங்கியது. அதுவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே இந்த தொகையை வழங்கியது. இம்முறை அறிக்கை அனுப்பி, நிவாரணம் கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எந்தெந்த மாவட்டங்கள்? பெங்களூரு நகர மாவட்டம், ஆனேக்கல், பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு, எலஹங்கா, பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் ஹொஸ்கோட், நெலமங்களா, பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் மாகடி, ராம்நகர்.
கோலார் மாவட்டம், கோலார், பங்காருபேட்டை, மாலுார், முல்பாகல், சீனிவாசப்பூர், தங்கவயல்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சிக்கபல்லாபூர், பாகேபள்ளி, சிந்தாமணி, கவுரிபிதனுார், குடிபந்தே, சித்லகட்டா, சேலுார், மஞ்சேனஹள்ளி.
துமகூரு மாவட்டம், சிக்கநாயக்கனஹள்ளி, குப்பி, கொரட்டகெரே, குனிகல், மதுகிரி, பாவகடா, சிரா, துமகூரு, துருவகெரே.
சித்ரதுர்கா மாவட்டம், செல்லகெரே, ஹரியுர், ஹொசதுர்கா, சென்னகிரி, ஹொன்னாளி, நியாமதி.
சாம்ராஜ்நகர் மாவட்டம், சாம்ராஜ்நகர், குண்டுலுபேட், கொள்ளேகால், எலந்துார், ஹனுார்.
மைசூரு மாவட்டம், எச்.டி.கோட், ஹுன்சூர், கே.ஆர்.நகர், மைசூரு, நஞ்சன்கூடு, டி.நரசிப்பூர், சரகூரு, சாலிகிராமா.
மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட், மலவள்ளி, மாண்டியா, நாகமங்களா, ஸ்ரீரங்கப்பட்டணா.
பல்லாரி மாவட்டம், பல்லாரி, சண்டூர், குருகோடு, கம்பளி.
கொப்பால் மாவட்டம், கங்காவதி, குக்கனுார், கனககிரி.
ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா, மஸ்கி, அரகெரோ.
பீதர் மாவட்டம் பீதர், பசவகல்யாண், ஹும்னாபாத், சிட்டகுப்பா.
பாகல்கோட் மாவட்டம், பாகல்கோட், பீலகி, ஜமகண்டி, குலேதகுட்டா, இலகல்.
விஜயபுரா மாவட்டம், விஜயபுரா, நிடகுந்தி, கோல்கரா.
கதக் மாவட்டம், கஜேந்திரகடா.
ஹாசன் மாவட்டம் அரகலகூடு, அரிசிகெரே, சென்னராயப்பட்டணா, ஹாசன், ஹொளேநரசிபுரா.
சிக்கமகளூரு மாவட்டம், அஜ்ஜம்புரா.
யாத்கிர் மாவட்டம், ஷாஹபுரா.
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட், ஹடகலி, ஹகரிபொம்மனஹள்ளி, ஹரப்பனஹள்ளி.
மே ற்கண்ட மாவட்டங்களில் உள்ள, 89 தாலுகாக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளளன.
பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளி; தாவணகெரே மாவட்டம் தாவணகெரே; மாண்டியா மாவட்டம் மத்துார், பாண்டவபுரா; ராய்ச்சூர் மாவட்டம் ராய்ச்சூர், லிங்கசுகுர்; சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா, என்.ஆர்.புரா, தரிகெரே; குடகு மாவட்டம் சோமவார்பேட்; உத்தர கன்னடாவின் முண்டுகோடு, எல்லாபுரா ஆகிய, 12 தாலுகாக்கள் சாதாரண வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
