/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்ப்ப தோஷம் போக்கும் கருடன் கோவில்
/
சர்ப்ப தோஷம் போக்கும் கருடன் கோவில்
ADDED : ஜூன் 23, 2025 11:08 PM

கோலார் மாவட்டம், தங்கச்சுரங்கத்துக்கு மட்டுமல்ல புராதன கோவில்களுக்கும் பிரசித்தி பெற்றதாகும். இம்மாவட்டத்தில் உள்ள கருடன் கோவில் மிகவும் சிறப்பானது.
கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின் கோலாதேவி கிராமத்தில் கருட பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கும், ராமாயணத்துக்கும் நெருக்கமான தொடர்புள்ளது.
ராவணன் சீதையை கடத்தி செல்லும் போது, தடுக்க வந்த ஜடாயுவின் இறக்கையை வெட்டினார். இறக்கை விழுந்த இடமே, தற்போது கருடன் கோவில் இடம் என, கூறப்படுகிறது.
அற்புதங்கள்
ஜடாயுவை ராவணன் கொன்ற இடம் என்பதால், இந்த இடம் கோலாதேவி என, அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1,000 ஆண்டுகளுக்கு முன் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. விஷ்ணுவை தன் முதுகில் சுமக்கும் கருடனுக்காக கட்டப்பட்ட கோவில், பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.
இங்கு குடிகொண்டுள்ள கருடனை தரிசித்தால் சர்ப்ப தோஷம் உட்பட எட்டு விதமான தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் கிடைக்கும்; திருமண தடை நீங்கும்; பில்லி, சூனியம் போன்ற செய்வினைகள் விலகும். வேண்டிய வரங்கள் கிடைக்கும். நோய்கள் குணமாகும்.
கருட பகவானின் அருளை பெற தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாரந்தோறும் சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவர்.
பிரம்மோத்சவம்
ஆண்டுதோறும் ஷிராவண மாதம் கடைசி சனிக்கிழமை அன்று, கோலாதேவி கருடன் கோவிலில் பிரம்மோத்சவம் நடக்கும். இக்கோவிலில் ஆஞ்சநேயரும் குடிகொண்டுள்ளார். இவரது கையில் பிரம்மாஸ்திரம் இடம் பெற்றுள்ளது.
ராவணன் சீதையை கவர்ந்து செல்லும் போது, அவரது அபயக்குரல் கேட்டு ஜடாயு, காப்பாற்ற செல்கிறது. அப்போது ராவணனால் இறக்கைகள் வெட்டப்பட்டு, பூமியில் விழுகிறது. வலியால், 'ராமா' என, மூன்று முறை அழைக்கிறது. இவ்வேளையில் ராமனின் தீவிர பக்தர் ஆஞ்சநேயர் அங்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே இங்கு ஆஞ்சநேயரையும் வழிபடுகின்றனர்.
கோலாதேவி கோவிலில் உள்ள கருடன் சிலை, மிகவும் அற்புதமானது. ஒரு கையில் விஷ்ணு, மற்றொரு கையில் மஹாலட்சுமியை ஏந்தியுள்ளார். இத்தகைய கருடனை தரிசித்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்
- நமது நிருபர் -.