கவுடாவை சந்தித்த ஜி.டி.தேவகவுடா ம.ஜ.த.,வில் இருப்பதாக உருக்கம்
கவுடாவை சந்தித்த ஜி.டி.தேவகவுடா ம.ஜ.த.,வில் இருப்பதாக உருக்கம்
ADDED : மே 16, 2026 03:39 AM

பெங்களூரு: முன்னாள் முதல்வர் குமாரசாமி மீதான அதிருப்தியால், ம.ஜ.த., செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ஜி.டி.தேவகவுடா, முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
மைசூரின் சாமுண்டீஸ்வரி தொ குதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடாவுக்கும், முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் சில ஆண்டுகளாகவே, மனஸ்தாபம் இருந்து வருகிறது. கட்சி பணிகள், ஆலோசனை கூட்டங்களில் பங் கேற்காமல் புறக்கணித்தார். இதன் விளைவாக, ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இவர், ம.ஜ.த.,வுக்கு முழுக்கு போட்டு, காங்கிரசில் இணைவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரின் பத்மநாப நகரில் உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் இல்லத்துக்கு, ஜி.டி.தேவகவுடா நேற்று மதியம் சென்றார். இரண்டு தலைவர்களும் நலம் விசாரித்து கொண்டனர். சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்கு பின், ஜி.டி.தேவகவுடா அளித்த பேட்டி:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தேன். பிரதமராக இருந்தவர். விவசாயிகளுக்கு ஆதரவாக நின்று போராடியவர். இவரை பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார். எங்களையும் உடன் அழைத்து செல்கிறார். தேவகவுடா மீது எனக்கு அதிக மதிப்பு உள்ளது.
இருவரும் அரசியல் விஷயங்களை பேசவில்லை. நன்றாக இரு; நல்லது நடக்கட்டும் என, ஆசிர்வதித்தார். நான் எவ்வளவு நேர்மையாக உழைத்தேன் என்பது, அவருக்கு தெரியும். என் தொகுதி மிகவும் பெரியது. இதன் வளர்ச்சிக்காக பணியாற்றுகிறேன்.
நான் இப்போதும் ம.ஜ.த.,வில் தான் இருக்கிறேன். வரும், 2028 சட்டசபை தேர்தலில், இதே கட்சியில் இருந்தே போட்டியிடுவேன்.
குமாரசாமியும், நிகிலும் மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைப்பதில்லை. எனவே நான் செல்வதில்லை. வரும் நாட்களில் எனக்கு அழைப்பு வந்தால், செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
