/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
முன்னோர் வீட்டுக்கு புதுவடிவம் கொடுத்த கீதாஞ்சலி
/
முன்னோர் வீட்டுக்கு புதுவடிவம் கொடுத்த கீதாஞ்சலி
ADDED : அக் 11, 2025 10:58 PM

முன்னோர்கள் வாழ்ந்த பழைய வீடுகள் என்றால், முகத்தை சுழிப்போரே அதிகம். காலம் காலமாக வாழ்ந்த வீட்டை இடித்துத் தள்ளி, இன்றைய காலத்துக்கு தக்கபடி புதுமையாக வீடு கட்டிக் கொள்ள விரும்புவர் அல்லது விற்று விடுவோரும் உண்டு. ஆனால் கட்டடக் கலைஞரான கீதாஞ்சலி, தன் பாட்டி வாழ்ந்த வீட்டுக்கு புதுப்பொலிவு அளித்துள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் வசிப்பவர் கீதாஞ்சலி, 24. இவர் கட்டடக்கலை பட்டதாரி. மங்களூரில் இவரது பாட்டியின் பழைய வீடு உள்ளது. இது 1962ல் கட்டியது. பாட்டியின் வீடு, கீதாஞ்சலிக்கு மிகவும் பிடித்தமானது. இந்த வீட்டுக்கு பழமை மாறாமல், புதுப்பொலிவு அளித்துள்ளார். மண்பாண்டங்கள் ஸ்டூடியோவாக மாற்றியுள்ளார். இதற்கு 'ஸ்டூடியோ காசினோ' என, பெயர் சூட்டியுள்ளார்.
இதை பார்க்க பல இடங்களில் இருந்தும், மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். பாரம்பரிய வீட்டை விற்காமல் இடிக்காமல், பாதுகாப்பதை கண்டு ஆச்சரியம் அடைகின்றனர்.
இது குறித்து கீதாஞ்சலி கூறியதாவது:
பழைய வீடுகள் எப்போதும் என்னை கவர்கின்றன. சிலர் பழைய வீடுகளை நிர்வகிக்க முடியாமல் இடிப்பதுண்டு. ஆனால் எனக்கு இத்தகைய வீடுகள், பழைய விஷயங்களை நினைவூட்டுகின்றன.
பாரம்பரியத்தை காப்பாற்றுவது என் நோக்கமாகும்.
பழைய அடையாள சின்னங்களை, நாம் இழக்கக் கூடாது. எனவே என் பாட்டியின் வீட்டை ஸ்டூடியோவாக மாற்றியுள்ளேன். இதன் மூலம் பாட்டியின் நினைவுகளை உயிரோட்டமாக வைத்துள்ளேன். இது நான் அவருக்கு அளிக்கும் அர்த்தமுள்ள பரிசு.
மற்ற பட்டதாரிகளை போன்று, நானும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன்.
அந்த வேலை சுதந்திரத்தை அளிக்கவில்லை. இதற்கிடையில் யூ - டியூபில், மண்பாண்டம் தயாரிக்கும் வீடியோ, என்னை வெகுவாக ஈர்த்தது. அந்த வீடியோ என் சிந்தனைகளை மாற்றியது. மங்களூரில் மண்பாண்டம் தயாரிக்கும் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.
என் கற்பனைகள் மேலும் மெருகேறியது. அதன்பின் என் பாட்டியின் வீட்டை ஸ்டூடியோவாக மாற்ற முடிவு செய்தேன். இதனால் பல பிரச்னைகளை எதிர்கொண்டேன். என் குடும்பத்தினரே, என் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர்.
நான் கட்டடக்கலைஞராகவே பணியை தொடர வேண்டும் என, குடும்பத்தினர் விரும்பினர். அவர்களை சம்மதிக்க வைப்பது, அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தாத்தாவும் என் திட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை.
என் தாய் பக்கபலமாக நின்றார். என் தாத்தாவிடம் பேசி, அவரது மனதை மாற்றினார். இல்லையென்றால், என் கனவு, கலைந்திருக்கும். மண் சுவர் என்பதால் வீடு இடியும் நிலைக்கு வந்தது. ஒவ்வொரு பிரச்னையும் என் மன உறுதியை அதிகரித்தன.
படிப்படியாக வீட் டை ஸ்டூடியோவாக மாற்றினேன். விநாயகர் சதுர்த்தி முடிந்த பின், ஸ்டூடியோ திறக்க திட்டமிட்டோம். ஆனால் சில பணிகள் முடியாததால். திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்டது.
ஸ்டூடியோ திறந்த பின், விருப்பம் உள்ளவர்கள் இங்கு, மண்பாண்டம் செய்யும் கலையை கற்கலாம். சுற்றி பார்த்து பொழுது போக்கலாம். தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம். மண்பாண்டம் செய்யும் தொழில், மிகவும் பழமையான கலைகளில் ஒன்றாகும். என் பாட்டியின் ஸ்டூடியோ, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை மற்றவரிடம் கொண்டு செ ல்கிறது.
மங்களூரு ஐ.டி., நகராக மாறுகிறது. அன்றாட வாழ்க்கையின் பரபரப்பால், மக்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்குவதை மறக்கின்றனர். இவர்களுக்கு எங்களின் ஸ்டூடியோ புது அனுபவத்தை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.