/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
சோளத்தண்டில் இருந்து வெல்லம் தயாரிக்கும் விவசாயி
/
சோளத்தண்டில் இருந்து வெல்லம் தயாரிக்கும் விவசாயி
ADDED : அக் 11, 2025 10:58 PM

கரும்பு அல்லது பனையில் இருந்து பிரித்தெடுக்கும் சாற்றை பயன்படுத்தி வெல்லம் தயாரிப்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் சோளத் தண்டில் இருந்தும் வெல்லம் தயாரிக்க முடியும் என்று விவசாயி நிரூபித்து காண்பித்துள்ளார்.
பாக ல்கோட் மாவட்டத்தின் ரபகவி பனஹட்டி தாலுகாவின் சங்கனட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஹாலிங்கப்பா இத்னால், 47. சோளத் தண்டில் இருந்து வெல்லம் தயாரித்து தனி முத்திரை பதித்து இருக்கிறார்.
இதுகுறித்து மஹாலிங்கப்பா இத்னால் கூறியதாவது:
பொதுவாக மக்கா சோளத் தண்டுகள் கால்நடைகளுக்கு தீவனமாகின்றன. சோளத் தண்டுகளால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று, விவசாயிகள் நினைப்பது தவறு. சோள தண்டுகளில் மறைந்து இருக்கும் சர்க்கரையை பயன்படுத்தி, வெல்லம் தயாரிக்க முடியும்.
கரும்பில் இருந்து வெல்லம் தயாரிக்க ஒரு ஆண்டு ஆகும். ஆனால் மக்கா சோளத் தண்டுகளில் இருந்து, நான்கு மாதங்களில் தயாரித்து விட முடியும்.
ஒரு ஏக்கருக்கு 10 டன் சோளத் தண்டுகளை வளர்க்க முடியும். ஒரு டன் கரும்புகளில் இருந்து 100 முதல் 1 10 கிலோ வெல்லம் உற்பத்தி செய்யலாம். சோளத் தண்டுகளில் 60 முதல் 70 கிலோ வெல்லம் உற்பத்தி செய்ய முடியும்.
நடவு செய்த 120 நாட்களில் சோளத் தண்டுகள், வெல்லம் தயாரிக்கும் முதிர்ச்சியை அடைந்துவிடும். அறுவடை செய்த இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் ஆலைக்கு கொண்டு சென்று அரைக்க வேண்டும். இல்லாவிட்டால் சாற்றின் அளவு குறைந்து, வெல்ல உற்பத்தியும் குறைந்துவிடும். சோளம் பச்சையாக இருக்கும்போதே தண்டுகளில் இருந்து பிரித்து எடுப்பது நல்லது.
தார்வாட், கொப்பால், கதக், ஹாவேரி மாவட்டங்களில் சோளம் உற்பத்தி அதிகமாக உள்ளது. இது, அம்மாவட்ட விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். சோளத் தண்டுகளில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தை நீண்ட காலம் சேமித்து வைப்பதற்கு, விவசாய பல்கலைக்கழக நிபுணர்களிடம் இருந்தும் ஆலோசனை பெறுகிறேன். விவசாயிகள் வருமானத்தை அதிகரிப்பதில், சோளம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .