/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
அதிவேக ட்ரோன் தயாரித்து மாணவர் சாதனை
/
அதிவேக ட்ரோன் தயாரித்து மாணவர் சாதனை
ADDED : டிச 07, 2025 04:56 AM

- நமது நிருபர் -
வயதுக்கும், சாதனைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை பலர் நிரூபித்துள்ளனர். மன உறுதி, விடா முயற்சி, புத்திக்கூர்மை இருந்தால் எந்த வயதிலும் சாதனை செய்யலாம். இதற்கு ஆறாம் வகுப்பு மாணவர் ஈஷான் விக்ரம் பால்தாடி உதாரணமாவார்.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் வசிப்பவர் விக்ரம் ஆச்சார்யா பால்தாடி. இவரது மனைவி சுஷ்பா. இத்தம்பதியின் மகன் ஈஷான், 11. இவர் சுரத்கல்லில் உள்ள டில்லி பப்ளிக் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே, எதையாவது ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் அதிகம். பெற்றோர் தனக்கு வாங்கி தந்த விளையாட்டு பொருட்களை பிரித்து போட்டு, மீண்டும் இணைப்பார்.
வீட்டில் உள்ள மொபைல் போன், டி.வி., ரிமோட்களையும் பிரித்து அதே போன்று ஜோடிப்பார். இந்த ஆராய்ச்சி திறன், ட்ரோன் தயாரிக்கும் ஆர்வத்தை துாண்டியது. கூகுள் உதவியுடன் அதிநவீன ட்ரோன் தயாரித்துள்ளார். ட்ரோன் தயாரிக்க வெளிநாடுகளில் இருந்து உதிரி பாகங்கள் வரவழைக்கப்பட்டன. இது அதிவேக ட்ரோன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஷான் தயாரித்த ட்ரோன் 150 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. ரேஸ் நடத்தவும் பயன்படுத்தலாம். ட்ரோன் செயல்பாட்டை கவனிக்க, மற்றொரு சாதனத்தையும் அவர் கண்டுபிடித்துள்ளார். மாணவரின் சாதனை நவம்பர் 8ல் உலக சாதனை புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது. 'சூப்பர் டேலன்டடு கிட்' என்ற விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.
எதிர் காலத்தில் தன் ஊரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கும், ட்ரோன் தயாரிப்பதை கற்றுத்தர வேண்டும். இந்திய ராணுவத்துக்கு உதவும் தொழில் நுட்பம் கொண்ட, ட்ரோன் தயாரிக்க வேண்டும் என்பது, ஈஷானின் கனவாகும். மகனின் சாதனையை பார்த்து, பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

