/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் காங்கிரஸ் கூட்டத்தில் கலாட்டா பாதியில் வெளியேறிய பொதுச்செயலர்
/
கோலார் காங்கிரஸ் கூட்டத்தில் கலாட்டா பாதியில் வெளியேறிய பொதுச்செயலர்
கோலார் காங்கிரஸ் கூட்டத்தில் கலாட்டா பாதியில் வெளியேறிய பொதுச்செயலர்
கோலார் காங்கிரஸ் கூட்டத்தில் கலாட்டா பாதியில் வெளியேறிய பொதுச்செயலர்
ADDED : டிச 26, 2025 06:46 AM
கோலார்: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் அபிஷேக் தத்தா முன்னிலையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், கோஷ்டி மோதல் வெடித்தது. இதனால், அபிஷேக் தத்தா கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறினார்.
கோலார் மாவட்ட காங்கிரஸ் பவனில், காங்கிரஸ் விவசாய பிரிவின் கூட்டம், மாநில விவசாயிகள் அணி தலைவர் சச்சின் மிகா தலைமையில் நடந்தது. அப்போது, கோலார் மாவட்ட விவசாயிகள் அணி தலைவராக முரளி கவுடாவை, கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்தூர் மஞ்சுநாத்துக்கு தெரிவிக்காமல், எப்படி நியமிக்கலாம் என, மஞ்சுநாத்தின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். எம்.எல்.ஏ, மஞ்சுநாத் வளர்ச்சி பணிகள் மேற்கொண்ட போது, தடுத்தவர்களுக்கு எப்படி கட்சி பதவி வழங்கலாம் என்றும் கூச்சலிட்டனர்.
இதற்கு மாநில உணவுத்துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'நாங்கள் காங்கிரசுக்கு புதியவர்களும் இல்லை; பிற கட்சியில் இருந்து வந்தவர்களும் அல்ல. எங்களை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை' என்றும் கூச்சலிட்டனர். இக்கூட்டத்தில் பேசவிருந்த, அகில இந்திய காங்., பொதுச்செயலர் அபிஷேக் தத்தா, 'இந்தக் கூட்டம் மத்திய பா.ஜ., அரசை எதிர்த்து, போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நடத்தப்படுகிறது. அதை மறந்து விட்டு, கூச்சல், குழப்பம் ஏற்படுத்தலாமா' என்றார்.
உடன் ஒரு நிர்வாகி எழுந்து, 'மாநிலத்தில் கட்சி செயல் வீரர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வந்த டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க தவறலாமா' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
'இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், கலாட்டா செய்வது தான் உங்கள் வேலையாக இருக்கிறது' என்று கூறிவிட்டு அபிஷேக் தத்தா கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். கோலார் மாவட்டத்தில் எப்போது கூட்டம் நடந்தாலும், காங்கிரஸ் கோஷ்டிகளின் மோதல்கள் நடக்கும். அதுபோலவே தற்போதும் நடந்துள்ளது.

