/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'வீடியோ கேம் யு டியூபரை' சந்திக்க ராஜஸ்தான் சென்ற 15 வயது சிறுவன் மீட்பு
/
'வீடியோ கேம் யு டியூபரை' சந்திக்க ராஜஸ்தான் சென்ற 15 வயது சிறுவன் மீட்பு
'வீடியோ கேம் யு டியூபரை' சந்திக்க ராஜஸ்தான் சென்ற 15 வயது சிறுவன் மீட்பு
'வீடியோ கேம் யு டியூபரை' சந்திக்க ராஜஸ்தான் சென்ற 15 வயது சிறுவன் மீட்பு
ADDED : டிச 25, 2025 07:25 AM
கலாசிபாளையா: வீடியோ கேம்களுக்கு அடிமையான 15 வயது சிறுவன், யு டியூபரை சந்திப்பதற்காக, வீட்டை விட்டு வெளியேறி, தனியாக ராஜஸ்தான் சென்றுள்ளார்.
பெங்களூரின், கலாசிபாளையாவில், 15 வயது சிறுவன், பெற்றோருடன் வசிக்கிறார். இவர் 10ம் வகுப்பு படிக்கிறார். மாணவர் வீடியோ கேம்களுக்கு அடிமையானவர். ராஜஸ்தானை சேர்ந்த யு டியூபர் ஒருவரின் வீடியோ கேம்களை, ஆர்வத்துடன் பார்ப்பார். அவரிடம் வீடியோ கேம்களை பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ள விரும்பினார்.
அவரை சந்திக்கும் நோக்கில், இம்மாதம் 20ம் தேதி பெற்றோருக்கு தெரியாமல், ராஜஸ்தானுக்கு புறப்பட்டார். மகனை காணாமல் தேடிய பெற்றோர், கலாசிபாளையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறுவனின் மொபைல் போன் லொகேஷனை வைத்து தேடிய போது, பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து, ராஜஸ்தானுக்கு ரயிலில் பயணித்தது தெரிந்தது.
அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தனர். இதற்கிடையே பெங்களூரில் இருந்து, 1,900 கி.மீ., தொலைவு உள்ள ராஜஸ்தானை, ரயிலிலும், பஸ்சிலும் சிறுவன் சென்றடைந்தார். தான் சந்திக்க விரும்பிய யு டியூபரை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசி, தன் விருப்பத்தை கூறினார்.
ஆனால் அவர், 'முதலில் படிப்பை முடி. அதன் பின் வீடியோ கேம்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்' என, அறிவுரை கூறினார். சிறுவனை சந்திக்க அவர் வரவில்லை.
என்ன செய்வது என தெரியாமல் ராஜஸ்தானின், அல்வார் பஸ் நிலையத்தில் சிறுவன் நடமாடி கொண்டிருந்தார். இவரை கவனித்த பஸ் நிலைய ஊழியர், விசாரித்த போது யு டியூபரை சந்திக்க வந்ததை கூறினார். ஊழியரும், சிறுவனை சதர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவனிடம் தகவல் பெற்றுக்கொண்டு, அவரது தந்தைக்கு போன் செய்து, சம்பவத்தை பற்றி விவரித்தனர். தந்தையும், சில போலீசாருடன் ராஜஸ்தானின், அல்வாருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

