/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மத்திய அரசிடம் பணம் பெற்று கொள்ளுங்கள்!
/
மத்திய அரசிடம் பணம் பெற்று கொள்ளுங்கள்!
ADDED : ஜூன் 25, 2025 02:15 AM

''மேம்பாட்டுப் பணிகளுக்கு மாநில அரசிடம் பணம் இல்லை. திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அனுப்பி, பணம் பெற்றுக் கொள்ளுங்கள்,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அரசின் கருவூலம் காலியாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுகின்றனர். தங்கள் தொகுதிக்கு மேம்பாட்டு நிதி வழங்கவில்லை என, முணுமுணுக்கின்றனர். வாக்குறுதித் திட்டங்களுக்கு அரசு அதிகம் செலவிடுகிறது.
இதன் விளைவாக மேம்பாட்டுப் பணிகள் தடைபடுகின்றன என்பது, பல எம்.எல்.ஏ.,க்களின் எண்ணம் மட்டுமின்றி, வெளிப்படையாகவே பேசுகின்றனர்.
நீளமாகும் பட்டியல்
இதே கருத்தை முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டியும் கூட, கூறியிருந்தார். இப்போது எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக, அரசுக்கு எதிராக திரும்புகின்றனர். வரும் நாட்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் பட்டியல் நீளமாகலாம்.
இதற்கிடையே உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் பேச்சு, எரியும் தீயில் நெய் வார்த்தது போன்றுள்ளது.
பாகல்கோட், பாதாமியில் நேற்று முன்தினம், பரமேஸ்வர் அளித்த பேட்டி:
மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, எங்களிடம் நிதியில்லை. முதல்வர் சித்தராமையாவிடமும் நிதியில்லை. அனைத்து நிதியையும், மக்களுக்கு கொடுத்து விட்டோம். அரிசி, பருப்பு, சமையல் எண்ணெயுடன், மதுபானமும் கொடுத்துள்ளோம். தற்போது அரசிடம் நிதியில்லை.
அழகான பாதாமி
பாதாமி மேம்பாடு தொடர்பாக, ஒரு பெரிய திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். அது 1,000 கோடி ரூபாய் செலவிலான திட்டமாக இருக்கட்டும். இந்த திட்டத்தை மத்திய அரசுக்கு அனுப்பி, நிதியுதவி கேளுங்கள். பாதாமியும் அழகாகும்.
ஒரு துறையில் நடக்கும் தவறால், ஒட்டுமொத்த அரசையும் குற்றம் சொல்வது சரியல்ல. போலீசில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கூறி உள்ளேன்.
ராஜினாமா செய்வதாக, எம்.எல்.ஏ., ராஜு காகே கூறியது தொடர்பாக விவாதிப்போம். எந்த பணியில் 13 கோடி ரூபாய் ஒதுக்கவில்லை என்று தெரிவித்தாரோ, அதுகுறித்து ஆய்வு செய்து, விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அவகாசம் தேவைப்படும்.
மக்கள் நலப்பணிக்கான அறிக்கை, தொகையை குறிப்பிட்டால் மட்டுமே, அதற்கு நிதி ஒதுக்குவதா வேண்டாமா என்பதை நிதித்துறை முடிவு செய்யும். அனுமதி அளித்தால் மட்டுமே அப்பணி நடக்கும்.
கடிதம் நகல்
முதல்வர் சித்தராமையாவுக்கு, எச்.கே.பாட்டீல் எழுதிய கடிதத்தில், எங்கள் அரசில் முறைகேடு நடந்ததாக குறிப்பிடவில்லை. அவர் அனுப்பிய கடிதத்தின் நகல் என்னிடம் உள்ளது. மாநிலத்தில் 1.50 லட்சம் கோடி ரூபாயில் சுரங்க முறைகேடு குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்த ஊழல் பணத்தில் பல சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இதை பல வழிகளில் பயன்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும். இதில், கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த முந்தைய அனைத்து அரசுகளும் செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசின் கருவூலம் காலியாக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நமது நிருபர் -