/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏரியின் நடுவே சிக்கிய சிறுமி மீட்பு
/
ஏரியின் நடுவே சிக்கிய சிறுமி மீட்பு
ADDED : நவ 25, 2025 06:01 AM

கோலார்: ஏரியின் நடுவில் படகில் சிக்கி பரிதவித்த, மூன்று வயது சிறுமியை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி அஞ்சலி. இவர்கள் தங்கள் 3 வயது பெண் குழந்தை அமுல்யாவுடன், கோலார் நகரின் சுஞ்சதேனஹள்ளியில் வசிக்கின்றனர். நேற்று மதியம் ரங்கசாமி, மீன் பிடிக்க கிராமத்தின் ஏரிக்கு வந்தார். தன்னுடன் குழந்தையையும் அழைத்து வந்தார்.
ரங்கசாமி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஏரிக்கரையில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அங்கிருந்த படகில் ஏறி அமர்ந்து கொண்டது. படகில் குழந்தை விளையாடியதால் ஏற்பட்ட அசைவில், படகு தானாகவே நகர்ந்து, ஏரியின் நடுவே சென்றுவிட்டது.
அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை திடீரென காணாமல் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி, ஏரியின் நடுவே குழந்தை இருப்பதை பார்த்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் அங்கு வந்து, குழந்தையை மீட்க முயற்சித்தனர். நீச்சல் வீரர் நிஜாமுதீனை வரவழைத்தும் பலன் இல்லை.
மிகவும் பெரிய ஏரி என்பதால், அவராலும் குழந்தையை மீட்க முடியவில்லை. அதன்பின் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த தீயணைப்பு படையினர், வேறொரு படகு கொண்டு வந்து, ஏரியின் நடுவே அபாயத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர்.

