/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசுக்கு எதிராக பேசும் காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பூட்டு! முதல்வர் சித்தராமையாவுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு
/
அரசுக்கு எதிராக பேசும் காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பூட்டு! முதல்வர் சித்தராமையாவுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு
அரசுக்கு எதிராக பேசும் காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பூட்டு! முதல்வர் சித்தராமையாவுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு
அரசுக்கு எதிராக பேசும் காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பூட்டு! முதல்வர் சித்தராமையாவுக்கு மேலிடம் அதிரடி உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 12:53 AM

அரசுக்கு எதிராக பேசும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பூட்டு போடும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு கட்சி மேலிடம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. அமைச்சர்கள் - எம்.எல்.ஏ.,க்கள் இடையிலான மோதல் விவகாரத்தில், 'பஞ்சாயத்து' பேச, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அடுத்த வாரம் பெங்களூரு வருகிறார்.
'பஞ்சாயத்து' பேச அடுத்த வாரம் வருகிறார் பொறுப்பாளர்
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தினமும் ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டுகள் அமைச்சர்கள் மீது எழுகின்றன. வீட்டு வசதி துறையில் நடந்ததாக கூறப்படும் ஊழல், தற்போது, 'ஹாட் டாப்பிக்' ஆக உள்ளது.
இதுதொடர்பாக ஆலந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னொரு பக்கம், காக்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகேவும், தன் பங்குக்கு, அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தர்மசங்கடம்
மொளகால்மூர் தொகுதி காங்., மூத்த எம்.எல்.ஏ., கோபாலகிருஷ்ணா, தன் தொகுதிக்கு ஒரு வடிகால் கூட கட்ட முடியவில்லை என்று பகிரங்க அதிருப்தி தெரிவித்த நிலையில், தனது தொகுதியில் தனக்கே தெரியாமல் பணிகள் நடப்பதாக, கலபுரகி எம்.எல்.ஏ., அல்லம்பிரபு பாட்டீலும் கொதித்து எழுந்து உள்ளார்.
அமைச்சர்கள் தங்களை மதிப்பது இல்லை; பணிகள் தொடர்பாக நாங்கள் கொடுக்கும் கடிதங்களை படித்து பார்ப்பது இல்லை என்று, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இது, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், இரண்டு நாட்கள் பயணமாக, முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் டில்லி சென்றார்.
விளக்கம்
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை சந்தித்து பேசினார். அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். நேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சித்தராமையா சந்தித்தார்.
பி.ஆர்.பாட்டீல் ஆடியோவில் பேசியது; ராஜு காகே, கோபாலகிருஷ்ணா அதிருப்தியை வெளிப்படுத்தியது; சில மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு எதிராக பேசுவது பற்றி விளக்கமாக எடுத்து கூறினார். இதை பொறுமையாக கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, 'அரசுக்கு எதிராக பேசும் எம்.எல்.ஏ.,க்களை வரவழைத்து அவர்களிடம் பேசுங்கள். அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடுங்கள்' என்று உத்தரவிட்டுள்ளார்.
கட்சி மேடை
இந்நிலையில், நேற்று காலை கட்சியின் தேசிய பொது செயலர் வேணுகோபாலை, சித்தராமையா, மூத்த அமைச்சர் மஹாதேவப்பா, ஆளுங்கட்சியின் சட்டசபை கொறடா அசோக் பட்டன் ஆகியோர் சந்தித்தனர்.
'பி.ஆர்.பாட்டீலுக்கு என்ன பிரச்னை என்று, முதலில் அவரிடம் கேளுங்கள். ஏற்கனவே ஒரு முறை அரசு மீது குற்றச்சாட்டு கூறினார். இப்போது இரண்டாவது முறையாக குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இதை இனியும் பொறுத்து கொள்ள முடியாது.
'இன்னொரு முறை அரசு பற்றி பொது வெளியில் பேசினால், பி.ஆர்.பாட்டீல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை பொது இடத்தில் பேச விடாதீர்கள். எதுவாக இருந்தாலும் கட்சி மேடைக்குள் பேச விடுங்கள். எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பூட்டு போடுங்கள்' என்று சித்தராமையாவுக்கு, வேணுகோபால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கர்நாடக காங்கிரசில் ஏற்பட்டு உள்ள குழப்பத்தை தீர்க்கவும், அமைச்சர்கள் - எம்.எல்.ஏ.,க்கள் இடையிலான மோதல் விவகாரத்தில், 'பஞ்சாயத்து' பேசவும், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா அடுத்த வாரம் பெங்களூரு வருகிறார். அமைச்சர்கள் - எம்.எல்.ஏ.,க்களை ஒன்றாக வைத்தோ அல்லது தனித்தனியாக அழைத்தோ பேசலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -