/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எனக்கும் என் குடும்பத்தினருக்கும்... 'பாதுகாப்பு கொடுங்கள்!' : தர்மஸ்தலா, 'பகீர்' கிளப்பியவர் எஸ்.ஐ.டி., முன் கதறல்
/
எனக்கும் என் குடும்பத்தினருக்கும்... 'பாதுகாப்பு கொடுங்கள்!' : தர்மஸ்தலா, 'பகீர்' கிளப்பியவர் எஸ்.ஐ.டி., முன் கதறல்
எனக்கும் என் குடும்பத்தினருக்கும்... 'பாதுகாப்பு கொடுங்கள்!' : தர்மஸ்தலா, 'பகீர்' கிளப்பியவர் எஸ்.ஐ.டி., முன் கதறல்
எனக்கும் என் குடும்பத்தினருக்கும்... 'பாதுகாப்பு கொடுங்கள்!' : தர்மஸ்தலா, 'பகீர்' கிளப்பியவர் எஸ்.ஐ.டி., முன் கதறல்
ADDED : ஜூலை 27, 2025 05:05 AM

மங்களூரு:தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக கூறி, 'பகீர்' கிளப்பியவர், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். “எனக்கும், என் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுங்கள், சடலங்களை புதைத்த இடங்களை அடையாளம் காட்டுகிறேன்,” என அதிகாரிகளுக்கு அவர் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் உள்ள புகழ்பெற்ற கோவிலில், துாய்மை பணியாளராக வேலை செய்தவர், சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த பீமா. கடந்த 4ம் தேதி தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் இவர் திடீரென அளித்த புகாரில், 'பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா கோவிலில் துாய்மை பணியாளராக வேலை செய்தபோது, கோவில் பக்கத்தில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்தேன்' என கூறி இருந்தார்.
இரண்டு மண்டை ஓடுகள், சில எலும்பு துண்டுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்திருந்தார். பெல்தங்கடி நீதிமன்றத்திலும் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின், தன் வக்கீல்கள் பாதுகாப்பில் ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டார். துாய்மை பணியாளர் அளித்த புகார் வெளியான பின், தர்மஸ்தலாவில் என்ன நடந்தது என்று விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க, அரசுக்கு, பல தரப்பில் இருந்து அழுத்தம் வந்தது.
* ஆவணம் சேகரிப்பு
இதையடுத்து உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில், எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், சவும்யலதா, ஜிதேந்திர குமார் தயமா ஆகியோர் இடம்பிடித்தனர். தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் எஸ்.ஐ., மற்றும் ஏட்டுகள் என 20 பேர், எஸ்.ஐ.டி.,யில் இணைக்கப்பட்டனர்.
மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், ஜிதேந்திர குமார் தயமா நேற்று முன்தினம் இரவு, தட்சிண கன்னடா மாவட்டத்தின் தலைநகர் மங்களூருக்கு வந்தனர். எஸ்.ஐ.டி., குழுவில் இடம்பெற்றுள்ள, எஸ்.ஐ., மற்றும் ஏட்டுகளும் வந்தனர்.
மங்களூரு மல்லிகட்டே பகுதியில் உள்ள, அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து, வழக்கின் விசாரணையை கையாள உள்ள எஸ்.ஐ., மற்றும் ஏட்டுகளுடன், அனுசேத் ஆலோசனை நடத்தினார். அதே நேரம் ஜிதேந்திர குமார் தயமா, தர்மஸ்தலா போலீஸ் நிலையத்திற்கு சென்று, அங்கு பதிவாகி இருந்த வழக்கின் ஆவணங்களை சேகரித்துக் கொண்டு, மங்களூரு திரும்பினார்.
* விசாரணை துவக்கம்
நேற்று காலை முதல் வழக்கின் விசாரணை துவங்கியது. புகார் அளித்தவரை விசாரணைக்கு அழைத்து வரும்படி, அவரது வக்கீல்களுக்கு, அதிகாரிகள் அனுசேத், ஜிதேந்திர குமார் தயமா ஆகியோர் கேட்டுக் கொண்டிருந்தனர். அதன்படி, நேற்று காலை 10:50 மணிக்கு, உடல் முழுதும் மறைக்கும் உடை அணிந்து, கண் மட்டும் தெரியும்படி புகார்தாரரை, வாடகை காரில் வக்கீல்கள் அழைத்து வந்தனர். சரியாக 11:00 மணிக்கு தனி அறையில் வைத்து அவரிடம் அனுசேத், ஜிதேந்திர குமார் தயமா ஆகியோர் விசாரணையை துவக்கினர்.
'தர்மஸ்தலா கோவிலில் எந்த ஆண்டுக்கு வேலைக்கு சேர்ந்தீர்கள்; உங்களை வேலைக்கு அழைத்து வந்தது யார்; என்ன வேலை செய்தீர்கள்; எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள்; நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை, புதைத்ததாக கூறி உள்ளீர்கள், அப்படி என்றால் போலீசாருக்கு ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை;
மேற்பார்வையாளர் உத்தரவிட்டதால் உடல்களை புதைத்ததாக கூறி உள்ளீர்கள், இதற்காக உங்களுக்கு பணம் எதுவும் கொடுத்தனரா; இத்தனை ஆண்டுகளுக்கு பின், இப்போது வந்து புகார் அளித்தது ஏன்; நீங்கள் புகார் அளித்ததன் பின்னணியில் யாராவது உள்ளனரா; புகார் அளிக்கும்படி அழுத்தம் கொடுத்தனரா; இந்த வழக்கில் யாருடைய பெயரையாவது எங்கள் முன்பு வெளிப்படுத்த விரும்புகிறீர்களா' என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
* ஐந்து மணி நேரம்
'நான் கூறுவது எல்லாம் உண்மை தான். ஒருவேளை நான் பொய் சொன்னால், அதற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பது எனக்கு நன்கு தெரியும். என் மனசாட்சி உறுத்துகிறது. உண்மையை கூற முன்வந்துள்ளேன். எனக்கும், என் குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுங்கள். அனைத்து உண்மையையும் கூற தயாராக உள்ளேன். உடல்களை எங்கெங்கு புதைத்தேன் என்று அடையாளம் காட்டுகிறேன்' என, விசாரணைக்கு ஆஜரானவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலை 11:00 மணிக்கு துவங்கிய விசாரணை, மாலை 4:00 மணி வரை, ஐந்து மணி நேரம் நடந்தது. விசாரணை முடிந்ததும் வக்கீல்களுடன் கருப்பு நிற காரில் ஏறிச் சென்றுவிட்டார். இந்த விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு பின், தர்மஸ்தலா அழைத்துச் சென்று உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காண வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.