வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது தங்க நகை புதையல் கண்டெடுப்பு
வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது தங்க நகை புதையல் கண்டெடுப்பு
ADDED : ஜன 11, 2026 05:45 AM

கதக்: லக்குன்டி கிராமத்தில், வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது, தங்க நகைகளுடன் கூடிய புதையல் கிடைத்தது.
கதக் மாவட்டம், பெடகேரியின் லக்குன்டி கிராமம் வரலாற்று பின்னணி உடையது. சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்ட அற்புதமான கோவில்கள், படிகள் கொண்ட கிணறுகள், கல் வெட்டுகள் இங்குள்ளன. சாளுக்கியர்கள் ஆட்சி காலத்தில், லக்குன்டியில் தங்க நாணயங்கள் அச்சிடப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.
இதே கிராமத்தில், வார்டு எண் 4ல் வசிக்கும் கங்கவ்வா பசவராஜ் ரித்தி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில், புதிதாக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார். நேற்று முன் தினம் பணிகள் நடக்கும் போது, அழகான பானையொன்று கிடைத்தது. அதில், பழங்காலத்து தங்க நகைகள் இருந்தன. இதுகுறித்த தகவல் அறிந்து, தொல்பொருள் துறையினரும், லக்குன்டி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும், வரலாற்று வல்லுநர்களும் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஒரு கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்தன. இவைகளை ஆய்வு செய்த பின்னர் தான், எந்த மன்னரின் ஆட்சி காலத்தை சேர்ந்தது என்பது தெரியும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
