ADDED : ஜூன் 19, 2026 01:17 AM
ஷிவமொக்கா: வரலாற்று பிரசித்தி பெற்ற, மஹிஷி உத்தராதி மடத்தில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, தங்க நகைகள் திருடப்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி வருத்தம் அடைந்துள்ளனர்.
ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவில், துங்கா ஆற்றங்கரையில் மஹிஷி உத்தராதி மடம் உள்ளது. இது கர்நாடகாவின் மிகவும் முக்கியமான மடங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
மடத்தில் இருந்த, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்க ஆரத்தி தட்டுகள் நேற்று முன்தினம் மதியம் திருடு போயுள்ளன. இதுகுறித்து, மடத்தின் நிர்வாக அதிகாரிகள், தீர்த்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்தாண்டு, ஏப்ரல் 5ம் தேதியன்றும், மடத்தில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் சேகரித்து வைக்கப்பட்டதாக, வதந்தி பரவியது.
இதை நம்பிய 12 முதல், 15 பேர் கொண்ட மர்ம நபர்கள், மடத்தில் புகுந்து, உள்ளே இருந்த லேப்டாப், மொபைல் போன் உட்பட, 1.16 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர்.
இப்போது ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான, மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் மடத்துக்கு வந்து, ஆய்வு செய்தனர்.
