/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனியார் தர்பாருக்காக தங்க சிம்மாசனம் தயார்
/
தனியார் தர்பாருக்காக தங்க சிம்மாசனம் தயார்
ADDED : செப் 17, 2025 07:35 AM

மைசூரு : தசராவை முன்னிட்டு நடக்கும் மைசூரு மன்னரின் தர்பாருக்காக, தங்க சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது.
மைசூரு தசராவுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தசராவில் மிகவும் முக்கியமான நிகழ்வு, மன்னரின் தனியார் தர்பார் தான்.
பாண்டவர்களிடம் இருந்து வந்ததாக நம்பப்படும் மைசூரு தங்க சிம்மாசனம், பின்னர், விஜயநகர மன்னர்கள் வசம் இருந்தது. அதை தொடர்ந்து உடையார்களிடம் வந்தது. 1610ல் ஸ்ரீரங்கபட்டணத்தில் தசராவை அப்போதைய மன்னர் ராஜ உடையார், அதில் அமர்ந்து ஆட்சி செய்தார்.
அன்று முதல் மைசூரில் 25வது மற்றும் கடைசி மன்னரான ஜெயசாமராஜ உடையார் உட்பட அக்காலகட்டத்தில் ஆட்சி செய்தவர்களின் தேவைக்கு ஏற்ப, சிம்மாசனம் மாற்றப்பட்டது.
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னரும், உடையார் மன்னர்களின் சந்ததியினர், தசரா திருவிழாவின்போது, தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து, தர்பார் நடத்தும் பாரம்பரியம் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
இத்தகைய சிம்மாசனம், தசராவின்போது ஒன்று சேர்க்கப்படும். நடப்பாண்டு தசராவுக்காக, அரண்மனை தர்பார் மண்டபத்தில், நேற்று காலை கணபதி ஹோமம், சாமுண்டி அம்மன் வழிபாடு ஆகியவை நடத்தப்பட்டன.
பின், அரண்மனையின் பாதுகாப்பு அறையில் இருந்து, தனித்தனியாக பிரித்து, திரை சீலைகளால் மூடப்பட்ட, தங்க சிம்மாசனத்தின் 14 பாகங்கள் எடுத்து வரப்பட்டன.
கெஜ்ஜெகள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள், காலை 10:15 மணிக்கு ஒன்று சேர்க்க துவக்கினர். ஜோடிக்கப்பட்ட தங்க சிம்மாசனம், திரை சீலையால் மூடப்பட்டது. இவை அனைத்தும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேற்பார்வையில் நடந்தன.
அத்துடன், திரை சீலையால் மூடப்பட்டுள்ள தங்க சிம்மாசனத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சிம்மாசனத்தை ஜோடித்த 14 பேரின் மொபைல் போன்களும், அவர்களிடம் இருந்து வாங்கப்பட்டு, இரண்டரை மணி நேரம் தனியாக வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று காலை 8:30 முதல் மதியம் 1:00 மணி வரை, சுற்றுலா பயணியருக்கு, மைசூரு அரண்மனை ஆணையம் தடை விதித்திருந்தது.