ADDED : ஏப் 17, 2025 06:48 AM

* முறைகேடு தடுப்பது யார்?
ரா.பேட்டையில், அறநிலையத் துறை கோவிலுக்கு சொந்தமான கடைகள் 40 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதாக சொல்றாங்க. ஆனால், அதை கடைக்காரங்க செட்டில் செய்தபாடில்லை. அவர்களை வெளியேற்றி வேறு யாருக்காவது அந்த கடைகளை வாடகைக்கு விட்டபாடும் இல்லை.
எதுக்காக, நிலுவைத் தொகை வாங்காமல் விட்டு வெச்சிருக்காங்கன்னு கேட்கவும் ஆளில்லை. அதேபோல சில வீடுகளும் கூட வாடகை செலுத்தல. அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் புகார் செய்திருக்காங்க.
அறநிலையத் துறை கோவில்களின் உண்டியல் கணக்கு கூட அரசு கவனத்துக்கு செல்வதில்லை. அதெல்லாம் தனிநபர் ஆதிக்கத்தில் இருப்பதாக சொல்றாங்க.
ராஜா, மகாராஜா காலத்து தர்பாரை சிலர் நடத்தி வராங்க. 20 வருஷமா கணக்கு காட்டாததால் கிராம மக்களே உண்டியலுக்கு சீல் வைக்க புகார் செய்தாங்க. வட்டாட்சியர் உத்தரவில் சீலும் வச்சாங்க.
ஆராதனா கமிட்டின்னு ஒண்ணு முன்பு இருந்தது. ஆனால், இந்த கைக்கார ஆட்சியில் இந்த கமிட்டியே இல்லை. சிதைந்த கோவில்களை கவனிக்கவும் யாரும் முன்வரலை. லாபம் தரும் கோவில்களில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் வழியில்லை.
------
* மருத்துவ கல்லுாரி அமையுமா?
கோலார் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லுாரி ஏற்படுத்த பட்ஜெட்டில் சி.எம்., அறிவிச்சாரு. இதே கோலாரில் இருந்து தான் அவரே அசெம்பிளிக்கு போட்டியிட விரும்பினாரு. தற்காலிகமா வீடும் வாடகைக்கு எடுத்தாரு. வாஸ்து பார்த்து குடியேறவும் தயார் ஆனாரு.
ஆனா, கட்சி தலைமை, 'கோலாரில் கோளாறு, வேண்டாம்'னு தடுத்துட்டாங்க. இந்த மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி ஏற்படுத்த பட்ஜெட்டில் அறிவிச்சாரு. இங்குள்ள ஆறு தொகுதிகளில், கோல்டு சிட்டி தொகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று துண்டு போட்டு இந்த தொகுதிக்காரங்க காத்திருக்காங்க.
ஆனால், ஆறு தொகுதியில் மருத்துவ கல்லுாரியை வெல்லப் போவது யாருன்னு தான் தெரியல. கோல்டு விளையும் தொகுதி பின்தங்கிய நிலையிலேயே இருப்பதால், மூன்று மாநிலங்களுக்கு எல்லையாகவும் இருப்பதால், மருத்துவ கல்லுாரியை இங்கு ஏற்படுத்த தொகுதி மக்கள் குரல் எழுப்புறாங்க.
தொகுதி அசெம்பிளிக்காரர், இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கலாமா. மருத்துவ வசதிக்கு இந்த நல்ல வாய்ப்பை கை நழுவ விடலாமா?
-------
* அமைச்சர் வரணுமா?
மாலுார், ப.பேட்டை, கோல்டு சிட்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான ஆர்.டி.ஓ., ஆபீசை கோல்டு சிட்டியில் ஏற்படுத்த 5 ஏக்கரில் ஆபீஸ் அமைக்கிற வேலைகள் நடந்து வருகிறது. இதுக்காக பல, 'சி' ஒதுக்கப்பட்டது. திட்டமிட்டபடி கட்டுமான பணிகள் எப்போதோ முடிந்திருக்க வேண்டும். ஆனால், இதன் பணிகள் ஆமை வேகத்தில் தான் நடந்து வருகிறது. முடியும் கட்டத்தில் இருப்பதாக சொல்றாங்க. முடிந்ததாக தெரியல.
ரயில் நிலையங்களில் கூட புதிய டிக்கெட் கவுன்டர்களை கட்டி முடித்தும் கூட திறந்து வைக்கல. மந்திரி வந்து தான் திறக்க வேணுமாம். அவரோட வருகைக்காக காத்திருக்காங்களாம்.
கோல்டு சிட்டியில் பள்ளிகள், மருத்துவமனைகள் திறக்க ராஜாதி ராஜாக்கள் காலத்தில் கூட இப்படி காத்திருக்கவில்லை. ஆனால், மக்களாட்சியில் மந்திரிக்காக காத்திருக்கணுமா?
------
* நாறும் கழிப்பறை ஊழல்!
கோல்டு சிட்டியில், சுகாதாரமான வாழ்வுக்கு சுற்றுப்புற துாய்மையை கடைப்பிடிக்க, திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தவிர்க்க, 50க்கும் அதிகமான பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேலாகின்றன. ஒவ்வொன்றும் பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்டது. இதற்காக கோடிகளில் பணத்தை செலவழித்தாங்க.
ஆனால், அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் மூடி கிடக்கின்றன. கழிப்பறை சுத்தப்படுத்த தண்ணீர் வசதி இல்லை. துப்புரவு செய்ய பணியாளர் நியமிக்கவில்லை. இதை பற்றி நகராட்சி கூட்டத்தில் பேசி முடிவெடுக்க யாருக்கும் கவனம் இருப்பதாக தெரியல.
வீடுதோறும் கழிப்பறை கட்ட, 15,000 ரூபாய் அரசு நிதி வழங்கியதில் மெகா ஊழலே நடந்திருக்குது. கழிப்பறை ஊழலில் கோல்டு சிட்டிக்கு நிகர் வேறெதுவும் இருக்க முடியாது. இதுக்கு தானா மக்கள் பிரதிநிதிகளை முனிசி.,க்கு தேர்ந்தெடுக்கிறோம்னு விபரம் அறிந்த வட்டாரங்கள் அங்கலாய்க்குது.