ADDED : மே 13, 2025 12:38 AM
இது என்ன சத்திய சோதனை?
ரா.பேட்டை சதுக்கத்தில் தேசப் பிதா சிமென்ட் சிலை ஆபத்தான கட்டத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, எப்போது விழலாமென தமது ரேகையை காட்டுகிறது.
இந்த சிலையின் அவலத்தை முனிசி., பொறுப்பாளர்கள் கண்டும், காணாமல் இருக்காங்க. இச்சிலையை புதுப்பிக்க ஏற்கனவே 10 எல் நிதி ஒதுக்கி, தீர்மானம் நிறைவேறியதா சொல்றாங்க. ஏற்கனவே இருந்த பிரமாண்டமான மண்டபத்தை இடித்து நொறுக்கினாங்களே தவிர, அந்த மண்டபத்தையே மறந்துட்டாங்க.
இங்கு மட்டுமல்ல, தற்போதுள்ள குரு பவன் கட்டடத்தின் வளாகத்தில் தேசப் பிதா நுாற்றாண்டில் ஒரு சிலையை நிறுவினாங்க. அதை அகற்றி 10 வருஷம் கடந்து போச்சு. அந்த சிலையும் காணவில்லை. சிலை இருந்த அடையாளத்தையும் அழிச்சுட்டாங்க. கோரமண்டல் பிட்டர்ஸ் பிளாக் பகுதியில் அப்பகுதியின் தேச பக்தர்கள் தேசப் பிதா சிலையை நிறுவினாங்க. அந்த சிலையுள்ள பகுதியில் குப்பைகள் நிரம்பி சீரழிந்து கிடக்குது.
தேசப் பிதாவுக்கு இது என்ன சோதனையோ. இச்சிலை அருகே கல்யாண மண்டபம் கட்ட 1974ல் அடிக்கல் நாட்டினாங்க. அந்த கல்வெட்டு மட்டுமே உடைந்து போகாமல் அப்படியே புதர் மத்தியில் உடைபடாமல் கிடக்குது. கல்யாண மண்டபம் கட்டப்படவே இல்லை. காந்தி சிலையை சுற்றி துப்புரவு செய்வார்களா என்பது அப்பகுதியினர் கேள்வியாக உள்ளது.
கல்லறை பேரிலும் ஊழலா?
முனிசி.,யில் பட்ஜெட் கூட்டத்துக்கு பிறகு மாதாந்திர கூட்டம் நடக்குமா. கூட்டத்தை நடத்திடாமல் காலம் கடத்திடுவாங்களா. வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கி இருப்பதாக சொல்றாங்க. ஆனால், அந்த நிதிக்கேற்ப வேலைகள் நடக்குதா.
ஆபீசர்களின் ஆதிக்கமே வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாக சொல்றாங்க. பாலக்காடு கல்லறைக்கு காம்பவுண்ட், தெரு விளக்கு, நடைபாதை வசதி இல்லை. ஆனால், கோடியில் பணம் சும்மா முடங்கி கிடக்குதாம். சாம்பியன் கல்லறையை பார்த்தாவது நியாயம் கேட்க வேணாமா.
கோவிட் காலத்தில் மாவட்டத்தில் எங்கு உயிரிழந்தாலும் அதனை அடக்கம் செய்ய மட்டுமே இங்கு கொண்டு வந்து புதைச்சாங்க. இது பாலக்காடு கல்லறை தோட்டம் என்பதை விட கொரானா கல்லறைகள் என்றே அழைத்தாங்க.
இங்குள்ள கல்லறை காம்பவுண்ட் ஏற்படுத்த நிதி ஒதுக்கினாங்களா, இல்லையா என்பது புதிராக உள்ளது. இறந்தோர் நினைவிடம் பேரிலும் ஊழல் நடந்ததாக சொல்றாங்க. அது நிஜம் தானா?
காற்றில் பறக்கும் வாக்குறுதி!
நாகாமரத்து ஓடையில் நீர் வளம் இருப்பதாக மாவட்ட நீர்வளத் துறையிடம் விபரம் இருக்குது. உடல்நலத்துக்கு கேடு ஏற்படாத சுத்தமான, சுகாதாரமான நீர்வளம் இருந்தும் ஏன் அதன் பேரில் கவனம் செலுத்த தவறுறாங்களோ. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக எரகோள் அணை இருக்குதுன்னு சொன்னாங்க.
ஆனால், அதைப் பற்றி செங்கோட்டைக்காரரோ, அசெம்பிளிகாரரோ, இதுவரையில் கோல்டு சிட்டிக்கு குடிநீர் வழங்குங்கள் என்று குரல் எழுப்பியதா எந்த தகவலும் இல்லையே.
பேருக்கு மண்ணின் மைந்தர் என்ற அடைமொழி டைட்டிலை போட்டுக்கிற சி.எம்., அரசியல் செயலர் கூட குடிநீருக்கு எந்த திட்டத்துக்கும் வழியை ஏற்படுத்தல.
குடிநீர் பிரச்னையை தீர்க்க வான் மழை தான் உதவுது. மக்கள் தலைவர்களின் மனசு துடிக்கலையே. தேர்தல் நேர வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன.