விமானம் முன் நின்று சிகரெட் பிடித்த 'கூகுள ் ' நிறுவன ஊழியர்
விமானம் முன் நின்று சிகரெட் பிடித்த 'கூகுள ் ' நிறுவன ஊழியர்
ADDED : மார் 31, 2026 04:35 AM

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில், விமானம் முன் நின்று புகை பிடித்ததுடன், எதிர்ப்பு தெரிவித்த ஊழியர் முகத்தில் புகையை ஊதி, கூகுள் நிறுவன ஊழியர் அடாவடித்தனம் செய்து உள்ளார்.
பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. விமானத்தின் முன் நின்ற பயணி ஒருவர், சட்டை பையில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து, புகையை ஊதினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, விமான பாதுகாப்பு ஊழியர், அந்த பயணியிடம் சென்று, இது, சிகரெட் புகைக்க தடை செய்யப்பட்ட பகுதி என்று கூறினார்.
கோபம் அடைந்த பயணி, ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார். இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு ஊழியர் தகவல் கொடுத்தார். பயணி அங்கு சென்றார். கவுன்டரில் இருந்த ஊழியரிடம் திமிராக பேசிய பயணி, ஊழியர் முகத்தில் சிகரெட் புகையை ஊதி விட்டார். அடாவடித்தனமாக பேசி விட்டு அங்கிருந்து சென்று விமானத்தில் ஏறி பயணித்தார். ஊழியர்கள் நடத்திய விசாரணையில் அந்த பயணி, கூகுள் நிறுவன ஊழியரான உத்கர்ஷ் கவுதம் என, தெரியவந்தது.
இவரது அடாவடித்தனம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவை பார்க்கும் பயனர்கள், இவ்வளவு திமிர்பிடித்த நபரை கூகுள் நிறுவனம், பணியில் இருந்து நீக்க வேண்டும். விமானத்தில் இவர் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என, கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
