/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோவில் சொத்துகளை மீட்க அரசு நடவடிக்கை
/
கோவில் சொத்துகளை மீட்க அரசு நடவடிக்கை
ADDED : ஆக 11, 2025 10:03 PM
பெங்களூரு : தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்களை பாதுகாக்க ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்துகளை அடையாளம் கண்டு, கோவிலின் பெயர்களில் பதிவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து, ஹிந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை:
ஹிந்து அறநிலையத்துறை கோவில்கள் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான 40,000 ஏக்கர் சொத்துகள், மற்றவரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்க, இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முதன் முறையாக, கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆவணங்களுடன் சட்டப்படி சொத்துகள் மீட்கப்படுகின்றன.
அறநிலையத்துறை கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு, மன்னர் காலத்தில் இருந்தே, தானமாக, காணிக்கையாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது கோவில் சொத்து ஆவணங்களில் பதிவாகவில்லை. நிலம் பட்டாவும் செய்யவில்லை. இதனால் அறநிலையத்துறை சொத்துகளை, வேறு நபர்கள் அனுபவித்தனர்.
தற்போது இந்த சொத்துகளை மீட்க, அறநிலையத்துறை உறுதி பூண்டுள்ளது. கோவில் சொத்துகளின் ஆவணங்கள் சேகரிக்கப்படுகின்றன. பல்வேறு சர்வே எண்களில் உள்ள சொத்துகளை படிப்படியாக மீட்கிறோம்.
தட்சிண கன்னடா மாவட்டத்தின், குக்கே சுப்ரமண்யா, ஹாசனின், பேலுார் சென்னகேசவ சுவாமி, மொசளே ஸ்ரீராமர் கோவில், நரகரஹள்ளியின், திருமலே, யாத்கிரியின் ஹொய்சாளேஸ்வரா, லாளனகெரே ஆஞ்சநேயர் உட்பட பல கோவில்களின் 40,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இதில் முதற்கட்டமாக 4,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை அந்தந்த கோவில்களின் பெயர்களில் பதிவு செய்ய தயாராகிறோம். இனி கோவில் சொத்துகள் ஆக்கிரமிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

