UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 10:36 PM
பெங்களூரு: பி.எம்.டி.சி., அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை, 40 சதவீதம் உயர்த்த, பொது போக்குவரத்து கட்டண ஒழுங்குமுறை ஆணைய குழு, மாநில அரசிடம் பரிந்துரை செய்து உள்ளது.
கர்நாடகாவில் அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இதை போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷும் உறுதி செய்துள்ளார். இருப்பினும், எத்தனை சதவீதம் உயரப்போகிறது என தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை எத்தனை சதவீதம் உயர்த்தலாம் என, பொது போக்குவரத்து கட்டண ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளது.
இது குறித்து, பொது போக்குவரத்து கட்டண ஒழுங்குமுறை ஆணைய குழுவினர் கூறியதாவது:
கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம்; என்.டபிள்யு.கே.ஆர்.டி.சி., எனும் வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகம்; கே.கே.ஆர்.டி.சி., எனும் கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் டிக்கெட் கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும்.
அதுபோல, பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மாநகர போக்குரவத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்களில் டிக்கெட் கட்டணம் 40 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும். அப்போது, தான் போக்குவரத்து கழகங் கள் நஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியும். டிக்கெட் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.
ஏனெனில், டீசல் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. பஸ்கள் பராமரிப்பு உள்ளிட்ட செலவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இன்றியமையாதது. இந்த உயர்வு, பயணியுக்கு சிரமத்தை கொடுக்கும் வகையில் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
