/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வகுப்புவாத எதிர்ப்பு படை விஸ்தரிக்க அரசு முடிவு
/
வகுப்புவாத எதிர்ப்பு படை விஸ்தரிக்க அரசு முடிவு
ADDED : மே 14, 2025 11:09 PM

பெங்களூரு: “கடலோர மாவட்டங்களில் ஏற்படும் மத ரீதியான மோதலை தடுக்க உருவாக்கப்பட்ட வகுப்புவாத எதிர்ப்புப் படை, வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படலாம்,” என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மத ரீதியான மோதல்கள், கலவரங்கள் ஏற்படுவதை தடுக்க வகுப்புவாத எதிர்ப்புப் படை உருவாக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடலோர மாவட்டங்களில் நடக்கும் மத ரீதியான மோதலை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது, போலீஸ் துறையின் கட்டுப்பாட்டிற்கு கீழே இயங்கும்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களின் காதல் திருமணத்தின்போது ஏற்படும் பிரச்னைகளில், கலவரம் ஏற்பட்டால் வகுப்புவாத எதிர்ப்புப் படையினர் விசாரிப்பர். இனி வரும் நாட்களில் வகுப்புவாத எதிர்ப்புப் படை மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படலாம்.
இதை உருவாக்குவதற்கு முன்பு டி.ஜி.பி., ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அறிக்கை குறித்து அரசு உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக்கு பின்னரே ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த படையை ஐ.ஜி.,க்கு மேல் பதவியில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பர். மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, அவர்களை கண்காணிக்கும் படையில் இருந்து சிலர் இப்படைக்கு மாற்றப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.