பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் எஸ்.ஐ.டி., அமைக்க அரசு முடிவு
பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் எஸ்.ஐ.டி., அமைக்க அரசு முடிவு
ADDED : ஏப் 11, 2025 11:20 PM

பெங்களூரு: பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் வாங்கியது பற்றி விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க, அரசு முடிவு செய்து உள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரப்பா. இவர், தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாக கான்ட்ராக்டர் சந்தோஷ் குற்றம் சாட்டினார். பின், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
இதையடுத்து பா.ஜ.,வை 40 சதவீத கமிஷன் அரசு என்று காங்கிரஸ் விமர்சித்தது. கான்ட்ராக்டர் சங்க முன்னாள் தலைவர் கெம்பண்ணாவும், பா.ஜ., அமைச்சர்கள் தங்களிடம் கமிஷன் கேட்பதாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். 'பேசிஎம்' போஸ்டர்களை ஒட்டி பா.ஜ.,வை, காங்கிரஸ் அலற விட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் கேட்கப்பட்டது பற்றி விசாரிக்க, ஓய்வு நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, சமீபத்தில் முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த, அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இதுபற்றி சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
பா.ஜ., ஆட்சியின் 40 சதவீத கமிஷன் பற்றிய அறிக்கையை பற்றி அமைச்சரவையில் விவாதித்தோம்.
எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சியில் மாநிலத்தில் நடந்த 3 லட்சம் பணிகளில் 1,729 பணிகள் மீது குற்றச்சாட்டு உள்ளன. பணிகளை மேற்கொள்ள சரியாக திட்டமிடவில்லை. நிதி ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்து உள்ளது. பல பணிகள் குறித்து சந்தேகம் உள்ளது.
இவைகளை பற்றி விசாரித்து, இரண்டு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எஸ்.ஐ.டி.,க்கு அறிவுறுத்த உள்ளோம்.
நைஸ் சாலையில் கட்டுமான பணிகளை தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி விசாரிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
