/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கஞ்சா போதையில் சிகிச்சை அரசு டாக்டர் அதிரடி கைது
/
கஞ்சா போதையில் சிகிச்சை அரசு டாக்டர் அதிரடி கைது
கஞ்சா போதையில் சிகிச்சை அரசு டாக்டர் அதிரடி கைது
கஞ்சா போதையில் சிகிச்சை அரசு டாக்டர் அதிரடி கைது
ADDED : ஜன 12, 2026 06:47 AM

பெலகாவி: கஞ்சா பழக்கத்துக்கு ஆளான அரசு டாக்டர், போலீசாரிடம் பிடிபட்டார். இவரிடம் 134 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெலகாவி மாவட்டத்தின் மாளமாருதி கிராமத்தில் வசிப்பவர் ராகுல் விட்டல் பன்டி, 32. இவர் குழந்தைகள் சிறப்பு டாக்டர். ஹிரேபாகேவாடி அரசு சமுதாய சுகாதார மையத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். கஞ்சா பழக்கத்துக்கு ஆளான இவர், சிறார்களுக்கு போதையில் சிகிச்சை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாளமாருதி போலீசாருக்கும் தொடர்ந்து புகார் வந்தது.
இதை தீவிரமாக கருதிய போலீசார், நேற்று அதிகாலையில், டாக்டர் ராகுல் பன்டியின் வீட்டுக்கு சென்று, திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது அறையில் பதுக்கி வைத்திருந்த 134 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலீசார், ராகுல் பன்டி போதையில் இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை மருத்துவ பரிசோதனை செய்த போது, கஞ்சா பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. இதனால், அவர் கைது செய்யப்பட்டார். இவர் கஞ்சா போதையில் இருந்ததை அறிந்து, கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இவரிடம் சிகிச்சை பெறும் குழந்தைகளின் கதி என, கேள்வி எழுப்பி உள்ளனர்.
பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் பூஷண் பொரசே அளித்த பேட்டி:
குழந்தைகள் சிறப்பு டாக்டரான ராகுல் விட்டல் பன்டி, கஞ்சா பயன்படுத்துவதாக, தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில், கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் பயன்படுத்தியதும் உறுதியானது; அவரை கைது செய்துள்ளோம். ராகுல் விட்டல் பன்டிவுக்கு, கஞ்சா எப்படி கிடைத்தது, எங்கிருந்து வாங்கினார் என்பது குறித்து, விசாரணை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

