ADDED : பிப் 08, 2025 06:34 AM
பெங்களூரு: தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் 2006க்கு பின், அரசு வேலைகளில் சேர்ந்தவர்கள், என்.பி.எஸ்., எனும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை ரத்து செய்ய கோரி அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த மாதம் முதல்வர் சித்தராமையா, 'இதுகுறித்து, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்' என உறுதி அளித்திருந்தார்.
இதற்கிடையில், நேற்று பல அரசு அதிகாரிகள், பெங்களூரு சுதந்திர பூங்காவில் என்.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் கூறுகையில், 'தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்' என்றனர்.
இதனால், சில அலுவலகங்களில் அன்றாடப்பணிகள் தடைபட்டன.