/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராணுவ கேன்டீன் மது வகைகளுக்கு கலால் வரியை உயர்த்த அரசு திட்டம்
/
ராணுவ கேன்டீன் மது வகைகளுக்கு கலால் வரியை உயர்த்த அரசு திட்டம்
ராணுவ கேன்டீன் மது வகைகளுக்கு கலால் வரியை உயர்த்த அரசு திட்டம்
ராணுவ கேன்டீன் மது வகைகளுக்கு கலால் வரியை உயர்த்த அரசு திட்டம்
ADDED : மே 16, 2025 10:59 PM
பெங்களூரு:''மாநிலத்தில் ராணுவ கேன்டீன்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் மீதான கலால் வரியை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது,'' என, மாநில கலால் துறை அமைச்சர் திம்மாபூர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வாக்குறுதித் திட்டங்கள் மூலம் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசு, தற்போது அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது.
இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்காக, அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியது, பஸ், மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியது.
இலக்கு நிர்ணயம்
நிதித்தேவையை சமாளிக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபான விலை, நான்கு முறை உயர்த்தப்பட்டது. நடப்பாண்டு பட்ஜெட்டில் கலால் துறைக்கு 40,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்காக நேற்று முன்தினம் பீர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் மீதான கலால் வரியை 5 சதவீதம் வரை மாநில அரசு உயர்த்தியது.
இதனால், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 முதல் 15 ரூபாயும்; முழு பாட்டிலுக்கு 50 முதல் 100 ரூபாயும்; பீர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் முதல் விலை உயர்த்தப்பட்டது.
குறைந்த வரி
மாநிலத்தில் உள்ள ராணுவ கேன்டீன்களுக்கு மாநில அரசு, ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் மதுபானங்களை வழங்குகிறது. இந்த மதுபானங்களுக்கு, மிக குறைந்த அளவே கலால் வரி விதிக்கப்படுகிறது.
இதனால் இங்கு விற்கப்படும் மதுபானங்களின் விலை, வெளி சந்தை விலையை விட 30 முதல் 40 சதவீதம் குறைவு.
கலால் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய, ராணுவ கேன்டீன்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் மீதான கலால் வரியை உயர்த்த கலால் துறை திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை கலால் துறை அமைச்சர் ஆர்.பி.திம்மாபூர் சில தினங்களுக்கு முன்பு அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், அண்டை மாநிலங்களில் விதிக்கப்படும் கலால் வரி குறித்தும் மாநில கலால் துறை ஆய்வு செய்து வருகிறது. இதுதொடர்பாக வரும் நாட்களில் அமைச்சரிடம் அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.திம்மாபூர் கூறியதாவது:
பிற மாநிலங்களில் விதிக்கப்படும் வரி விகிதத்தை மறுபரீசிலனை செய்து, மாநிலத்திலும் கலால் வரியை திருத்தும் திட்டம் உள்ளது.
ராணுவ கேன்டீன்களுக்கு வழங்கும் மதுபானங்களின் விலையை அதிகரிக்கும் திட்டம் உள்ளது. தற்போது, கேன்டீன்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களுக்கு குறைந்த வரியே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.