/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர் சேர்க்கை அதிகரித்தால் வெளிநாட்டு 'டூர்' அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சலுகை
/
மாணவர் சேர்க்கை அதிகரித்தால் வெளிநாட்டு 'டூர்' அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சலுகை
மாணவர் சேர்க்கை அதிகரித்தால் வெளிநாட்டு 'டூர்' அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சலுகை
மாணவர் சேர்க்கை அதிகரித்தால் வெளிநாட்டு 'டூர்' அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சலுகை
ADDED : நவ 21, 2025 06:11 AM
பெங்களூரு: அரசு பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 2026 - 27ம் கல்வியாண்டில் மாநில கல்வித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை எட்டும் பள்ளியின் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களை வெளிநாட்டு சுற்றுலா அனுப்புவதாக, அரசு அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகள் என்றால், முகத்தை சுளிப்பவர்களே அதிகம். இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. தரமான கல்வி கிடைக்காது.
அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.
இதே காரணத்தால், பெற்றோர் கடன் வாங்கியாவது பிள்ளைகளை தனியார் பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கின்றனர்.
மாநில அரசு, மாணவர்களின் நன்மைக்காக இலவச மதிய உணவு, பாட புத்தகங்கள், சீருடை, ஷூக்கள், சைக்கிள் வழங்குகிறது. அவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில், முட்டை, வாழைப்பழம் வழங்குகிறது.
அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களும் தாராளமாக நிதியுதவி வழங்குகின்றன. எனினும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை. மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக, அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன.
இதனால் கல்வி வல்லுநர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, திட்டங்கள் வகுக்கும்படி அறிவுறுத்திஉள்ளனர்.
எனவே, கல்வித்துறை வரும் 2026 - 27ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை எட்டும் பள்ளியின் மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களை வெளிநாட்டு சுற்றுலா அனுப்புவதாக, அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை 30 சதவீதம் குறைந்துள்ளது. 2010 - 11ம் ஆண்டின்போது, ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, 55 லட்சமாக இருந்தது.
இப்போது 38 லட்சமாக குறைந்துள்ளது. இதை தீவிரமாக கருதிய கல்வித்துறை, அரசு கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 15 சதவீதம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
வரும் 2026 ஜூன் வரை செயல்படுத்த வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அதிகாரிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தையும் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வித்துறை நிர்ணயித்த இலக்கை எட்டும் பள்ளிகளுக்கு பொறுப்பான, தலா ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், சர்வதேச அளவிலான கல்வியை ஆய்வு செய்ய, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் அனுப்பப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

