மத நிகழ்வுகளில் டி.ஜே., இசைக்கு தடை விதிக்க அரசு ஆலோசனை
மத நிகழ்வுகளில் டி.ஜே., இசைக்கு தடை விதிக்க அரசு ஆலோசனை
ADDED : மார் 19, 2026 05:28 AM
பெங்களூரு: மத நிகழ்ச்சிகளில் டி.ஜே., இசைக்கு தடை விதிப்பது குறித்து, அரசு ஆலோசிப்பதாக அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார்.
சட்டசபையில், ஷிவமொக்கா பா.ஜ., உறுப்பினர் சன்னபசப்பா நேற்று பேசுகையில், ''ஷிவமொக்காவில் சஹ்யாத்ரி உத்சவ் விழாவை தொடர்ந்து நடத்த அரசு நிதி ஒதுக்க வேண்டும்,'' என்றார்.
கங்காவதி பா.ஜ., உறுப்பினர் ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், ''ஆனேகுந்தி உத்சவத்தை மீண்டும் துவங்க வேண்டும்,'' என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர்கள் பேசிய போது, மத நிகழ்ச்சிகளில் டி.ஜே., இசையை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதம் நடந்தது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பேசுகையில், ''அனைத்து கொண்டாட்டங்களிலும் தற்போது டி.ஜே., இசை கொண்டு வரப்படுகிறது. டி.ஜே., பாடல்கள் இசைக்காவிட்டால் நமது தெய்வங்கள் முன்னேறி செல்லாதா. இது வெட்ககேடான விஷயம். நமது கலாசாரத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை,'' என்றார்.
கன்னட கலாசார அமைச்சர் சிவராஜ் தங்கடகி பதில் அளிக்கையில், ''டி.ஜே. இசையால் நிறைய பிரச்னை ஏற்படுகிறது. எதிர்க்கட்சியினரும் ஒப்பு கொண்டால், டி.ஜே., இசைக்கு தடை விதிப்போம். அரசும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறது,'' என்றார்.
இதற்கு பா.ஜ., சன்னபசப்பா எதிர்ப்பு தெரிவித்தார். 'மசூதிகளில் அஸான் ஒலிப்பதை உங்களால் தடை செய்ய முடியுமா' என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காதர், '' உச்ச நீதிமன்றம் ஒலியின் டெசிபல் அளவை நிர்ணயித்து உள்ளது. இதை அனை த்து அரசும் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
பா.ஜ., உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், ''டி.ஜே., சத்தத்தால் இதய பிரச்னை உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். குழந்தைகளும் காதுகளை மூடி கொள்கின்றனர்.
' 'இந்த விஷயத்தில் போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. டி.ஜே.,வால் ஏற்படும் ஒலி மாசுபாட்டை நாம் தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
