நதிநீர் பிரச்னையை நிதானமாக தீர்ப்பதே அரசின் செயல்பாடு: ராமலிங்க ரெட்டி
நதிநீர் பிரச்னையை நிதானமாக தீர்ப்பதே அரசின் செயல்பாடு: ராமலிங்க ரெட்டி
ADDED : ஆக 12, 2026 12:02 AM
கோலார்: ''காவிரி, கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறுகளை நிதானத்துடனும், ஒருமித்த கருத்துடனும் தீர்ப்பது அரசு நிலைப்பாடாகும்,'' என, கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.
கோலார் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை நேற்று பார்வையிட்ட பின், அவர் அளித்த பேட்டி:
கோலார் மாவட்டத்தில் நிலவும் வறட்சி சூழலை போக்க விரிவான வளர்ச்சிப் பணிகள், எத்தினஹொளே திட்டத்தின் முன்னேற்றம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பேளூர் தாலுகாவில் 800 மீட்டர் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையில் சிறப்பு நிவாரணம் வழங்கி தீர்க்கப்பட்டுள்ளது. குப்பி தாலுகாவில் 1.8 கி.மீ., வன நிலத்தை ஒப்படைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் எத்தினஹொளே நீர் தொட்டபல்லாப்பூரை சென்றடையும்.
அடுத்த ஆண்டு கோலார், சிக்கபல்லாபூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 300 ஏரிகளுக்கு நீர் நிரப்புவது தான் இதன் இலக்கு. இவ்வாண்டு, மாவட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட மழை இல்லாததால் விதைப்பு பணிகள் பாதிக்கப் பட்டன.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் விதிமுறைபடி, தற்போது 75 - 80 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
காவிரி, கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான நீர் தகராறுகளை நிதானத்துடனும், ஒருமித்த கருத்துடனும் தீர்ப்பது அரசு நிலைப்பாடாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், எம்.எல்.சி., அனில் குமார், வேம்கல், நரசாபுரா திட்டக்குழுத் தலைவர் அக்ரஹாரா சவுத்ரி உட்பட பலர் உடன் இருந்தனர்.
